உலகம்

ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு அதிவேகம்... ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா.!

ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு அதிவேகம்... ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா.!

JustinDurai

கப்பலில் இருந்து ஏவப்படும் ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது ரஷ்யா.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை அன்று, ரஷ்ய ஆர்க்டிக்கில் உள்ள வெள்ளைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை, அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடலில் ஒரு இலக்கை, ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது இதுவே முதல் முறை என்று ரஷ்ய இராணுவ அதிகாரி வலேரி ஜெராசிமோவ் கூறினார்.

ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணை அதன் இலக்கை 450 கிலோமீட்டர் (280 மைல்) தொலைவில் மாக் 8 வேகத்தில் துல்லியமாக எட்டியது. இது ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு அதிவேகமானது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், ‘‘சிர்கோனின் சோதனை வெற்றி, எங்கள் ராணுவப்படைகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ரஷ்யா முழுவதிலும் ஒரு பெரிய நிகழ்வு" என்றார்.

ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரிசோதித்த போது ஏவுகணை சோதனை தளத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.