உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள ராணுவ நடவடிக்கை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகள் கடந்த நான்கு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பங்குச்சந்தையில் சரிவு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம், தங்கம் விலை உயர்வு என ஸ்திரமற்ற சூழலில் விலை நிலவரங்கள் உள்ளன.
4000 புள்ளிகள் சரிவு
கடந்த 15 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் சுமார் 4000 புள்ளிகள் வரை சரிந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.4.26 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது. கடந்த 15 வர்த்தக நாட்களில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பங்குகளின் சந்தை மதிப்பு சரிந்தது.
பிப்ரவரி 16-ம் தேதி வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.262 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 4) இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.246 லட்சம் கோடியாக இருந்தது. 15 வர்த்தக தினங்களில் 15.39 லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்திருக்கிறது. டாலர் மதிப்பில் இந்த தொகை 201 பில்லியன் டாலர்.
சர்வதேச செலாவணி நிதியத்தின் கணக்குபடி 2021-ம் ஆண்டு முடிவில் உக்ரைன் ஜிடிபி 181 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டின் ஜிடிபியை விட இந்திய பங்குச்சந்தையில் அதிக சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக மும்பையில் உள்ள பங்குச்சந்தை நிபுணருடன் உரையாடினோம். அப்போது அவர் கூறும்போது, “10 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பல நாடுகள் சிக்கலில் இருந்ததன. கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் நிதி சிக்கலில் இருந்தன. இது உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என கருதப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் கிரீஸ் என்பது தனிநாடு கிடையாது, பொதுவான நாணயத்தை (யுரோ) பயன்படுத்துகிறது. அதனால் கிரீஸ் என்னும் தனிநாட்டின் பிரச்சினை அல்ல என்பதால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. சர்வதேச ஜிடிபியில் சிறிய பங்கினை கூட வகிக்காத கிரீஸ் பிரச்சினை காரணமாக இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்தது. ஆனால் அதன் பிறகு இந்திய சந்தைகள் உயர்ந்தன.
போர் நடக்கிறது, மக்களுக்கு பிரச்சினை, கச்சா எண்ணெய் விலை யேற்றம் ஆகியவை பிரச்சினையாக இருந்தாலும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிக்கலே கிடையாது என்பதுதான் பங்குச்சந்தை பல முறை நமக்கு உணர்த்தி இருக்கிறது. அதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் இதனை வாங்கும் வாய்ப்பாக பார்க்க வேண்டும். இதற்கு கீழ் சரியாது என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த சரிவை சிறிதளவுகாவது நீண்ட கால முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.
சென்னையில் உள்ள முதலீட்டு ஆலோசகர் ஒருவரிடம் பேசிய போது, “பங்குச்சந்தை என்பது இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களின் லாப நஷ்டம் மற்றும் செயல்பாட்டை பொறுத்து பங்குகளின் விலை இருக்கும். இந்தியாவில் செயல்பாடு நன்றாக இருக்கும்போது இதுபோன்ற சர்வதேச சூழல் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
போர் பதற்றம் இன்னும் நீடிக்கிறது என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் எப்போதெல்லாம் சர்வதேச நெருக்கடியால் இந்திய பங்குச்சந்தை சரிகிறதோ அதன் பிறகு பெரிய ஏற்றத்தை சந்திருக்கிறது. ஈராக் பிரச்சினை, சப் பிரைம் பிரச்சினை, பிரெக்சிட் பிரச்சினை என சர்வதேச காரணங்களில் பங்குச்சந்தை கடுமையாக சரிந்திருக்கிறது. ஆனால் அதன் பிறகு மீண்டு வந்திருக்கிறது என்பது வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த சரிவை நாம் பயன்படுத்திக் கொள்கிறோமா அல்லது இருக்கும் பங்குகளை / முதலீட்டை நஷ்டத்தில் வெளியேறுகிறோமா என்னும் வாய்ப்பு நம்மிடம் இருக்கிறது.
சமீபத்திய செய்தி: உக்ரைனிலிருந்து இதுவரை எத்தனை மாணவர்கள் மீட்பு? - மத்திய அரசு தகவல்