cancer x page
உலகம்

கேன்சருக்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா.. இலவசமாய் தர முடிவு!

ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

Prakash J

மனிதரைத் தாக்கும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக இருக்கிறது. இதிலும் பல பிரிவான புற்றுநோய்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதில் ஒருசில புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என்கின்றனர், மருத்துவர்கள்.

அதற்கு உதாரணமாய் நம் இந்தியாவில் ஒருசிலரைச் சொல்லலாம். முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ் ஜோத் சிங்கின் மனைவி, யுவராஜ் சிங், நடிகை சோனாலி பிந்த்ரே உள்ளிட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதன்பிறகு எடுத்த சிகிச்சைகளில் அதிலிருந்து அவர்கள் மீண்டனர். இன்னும் சொல்லப்போனால், சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது.

இதன்காரணமாகவே, புற்றுநோய் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இந்த தடுப்பூசி எவ்வகையான புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின், ”புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன் கடைசிக்கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

புதின்

மற்ற நாடுகளும் இதேபோன்ற திட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, நியூஸ்வீக் படி, தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளை உருவாக்க பிரிட்டிஷ் அரசாங்கம் ஜெர்மனியை தளமாகக் கொண்ட BioNTech நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களான மாடர்னா மற்றும் மெர்க் & கோ ஆகியவை ஒரு சோதனை புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன. இது மிகவும் கொடிய தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசியாகப் பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களை ஏற்படுத்தும் மனித பாப்பிலோமா வைரஸ்களுக்கு (HPV) எதிராகச் சில உரிமம் பெற்ற தடுப்பூசிகள் உள்ளன. அத்துடன் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஹெபடைடிஸ் பி (HBV)க்கு எதிரான தடுப்பூசிகளும் உள்ளன.