ரஷ்ய அதிபரை விமர்சித்த அலெக்சி நவால்னி விஷம் வைத்தே கொல்லப்பட்டார் என்பதை ஆய்வுகள் உறுதிபடுத்துவதாக அவரது மனைவி யூலியா நவால்னியா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்டவர் அலெக்ஸி நவால்னி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபரை விமர்சித்த அலெக்சி நவால்னி விஷம் வைத்தே கொல்லப்பட்டார் என்பதை ஆய்வுகள் உறுதிபடுத்துவதாக அவரது மனைவி யூலியா நவால்னியா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்ட நவால்னியின் உடற்கூறு மாதிரிகளை, இரண்டு வெளிநாட்டு ஆய்வகங்கள் பரிசோதித்ததாகவும், இந்த ஆய்வகங்கள் ஒரே முடிவுக்கு வந்ததாகவும் நவால்னியின் மனைவி கூறியுள்ளார். பகுப்பாய்வுகளை நடத்திய ஆய்வகங்கள் அவற்றின் முடிவுகளை வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். அலெக்சி இறந்தது முதல் தொடர்ந்து, யூலியா நவால்னியா புதின் அரசு மீது குற்றஞ்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அலெக்சி மரணம் தொடர்பாக பிற நாட்டுத் தலைவர்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அதேநேரத்தில், இத்தகவலை அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. நடைப்பயணத்திற்குப் பிறகு நவால்னி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய அரசு ஊடகங்களின் ஆரம்ப அறிக்கைகள் மரணத்திற்கு இரத்த உறைவு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தன. எனினும், நவால்னியாவும் அவரது குழுவின் மற்ற உறுப்பினர்களும் அதிகாரிகள் வேண்டுமென்றே ஆதாரங்களை மறைத்ததாகக் குற்றம்சாட்டினர்.