ஜபோரிஜியா அணுமின் நிலையம், ஜெலென்ஸ்கி, புடின்
ஜபோரிஜியா அணுமின் நிலையம், ஜெலென்ஸ்கி, புடின் twitter
உலகம்

”ஜபோரிஜியா அணுமின் நிலையத்தைத் தாக்க ரஷ்யா சதி செய்கிறது” - உக்ரைன் அதிபர் பகீர் குற்றச்சாட்டு!

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் ஓர் ஆண்டைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர்

இதற்கிடையே, உக்ரைனில் போரிட ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களமிறக்கப்பட்ட வாக்னர் படை, அந்த நாட்டுக்கு எதிராகத் திரும்பி போர் தொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன்பின், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாணப்பட்டது.

இந்த நிலையில், ரஷ்யா, ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia) அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய துருப்புக்கள், அணுமின் நிலையத்தில் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்ய துருப்புகள் வெடிமருந்துகளை வைத்துள்ளன. இதனால் தாக்குதல் நிகழலாம் அல்லது வேறு ஏதாவது நடக்கலாம். இது, உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

எவ்வாறாயினும் அணுமின் நிலைய ஆபத்துக்கு ரஷ்யா மட்டுமே ஆதாரமாக இருக்கும். வேறு யாரும் இல்லை என்பதை இந்த உலகம் பார்க்கிறது” என காணொளி உரை ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

அணுமின் நிலையத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முயல்வதாக உக்ரைன் உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

பிப்ரவரி 2022இல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, தென்கிழக்கு உக்ரைனில் உள்ள அணுமின் நிலையம் ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ளது. உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, 6 உலைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றின. தற்போது இரு நாடுகளும் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல், அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகள் கலந்த வெடிமருந்துகளை வீச உக்ரைன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ட்ரோன்மூலம் கவனித்து வருவதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.