செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
பிரிட்டனின் இரண்டு நிறுவனங்கள் தயாரித்த ட்ரோன்கள், ரஷ்யாவின் ராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டன், உக்ரைன் நெருக்கடியை திட்டமிட்டு மேலும் தீவிரப்படுத்துவதாகவும், ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரிட்டிஷ் உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்திய ட்ரோன்கள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரிட்டன், உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுடன் உறுதியாக நிற்பதாகவும், தற்காப்புக்குத் தேவையான ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்குவதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கிடையில், உக்ரைன் நடத்திய சமீபத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்யாவை நோக்கி ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுபுறம், ரஷ்யாவும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏப்ரலில் உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள், நீண்டதூர தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை வழங்கப் போவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.