Russia Infiltration at NATO military headquarters Reuters
உலகம்

நேட்டோ ராணுவ தலைமையகத்தில் ஊடுருவல் : அம்பலமான ரஷ்யாவின் முயற்சி... அதிர்ந்து போன ஐரோப்பா!

நேட்டோ அமைப்பின் முக்கிய தலைமையகத்தில் ரஷ்யா ஊடுருவியுள்ள செய்தி நேட்டோ நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

நேட்டோ (NATO) அமைப்பின் விரைவு அதிரடிப் படைத் தலைமையகம் இங்கிலாந்தின் குளோசெஸ்டர் (Gloucester) நகருக்கு அருகே அமைந்துள்ளது. 1992-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தலைமையகம், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் கொண்ட பெரிய ராணுவப் படையை வழிநடத்தி வருகிறது.

இந்த தலைமையகத்தில் நேட்டோ உறுப்பினர்களான அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நேட்டோ உறுப்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

Reuters

இந்த ராணுவ தளத்தில் இருந்து ரஷ்யாவுக்கு முக்கிய செய்திகள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாக பிரிட்டன் உளவுத்துறையான MI5 தங்கள் நாட்டு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இங்கு பணியாற்றி வந்த 41 வயது அமெரிக்க ராணுவ வீரரே இந்த உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்த அமெரிக்க ராணுவ வீரரை லண்டன் பெருநகரக் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (Counter Terrorism Policing) கைது செய்துள்ளதுனர். அவர் லண்டனில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Kash Patel

தொடர்ந்து அவருக்கு சொந்தமான கருவிகளை ஆய்வு செய்ததில் அவர் பல்வேறு முக்கிய ராணுவ தகவல்களை ரகசியமாக ரஷ்யாவுக்கு அனுப்பியது தெரியவந்தது. அமெரிக்க ராணுவ வீரர் குறித்த தனிப்பட்ட தகவல்கள் வெளியாகாத நிலையில், அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் சீன் ஸ்டின்ச்சன், (Sean F. Stinchon)) முக்கியத் தகவல்களைக் கையாளும் பொறுப்பில் உள்ள ஒரு மூத்த வீரரின் இத்தகைய செயல், உள்நாட்டு அச்சுறுத்தல்கள் எவ்வளவு தீவிரமானவை என்பதை காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் (Kash Patel) , "அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய துரோகத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார். அதே நேரம் , ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) , "இந்தக் கைதுக்கும் ரஷ்யாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதீத பாதுகாப்பு கொண்ட நேட்டோவின் தலைமை அலுவலகம் ஒன்றில் ரஷ்யாவின் உளவுத்துறை இந்த அளவு ஊடுருவியுள்ளது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பாதுகாப்பு அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.