அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்திய நிறுவனங்கள் நிறுத்தவில்லை.
இதனால் அமெரிக்க - இந்திய உறவுகள் விரிசலைச் சந்தித்து வருகின்றன. அதேநேரத்தில், இந்திய - ரஷ்ய உறவுகள் நீண்டகாலமாகவே உறுதியானதாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக சீனாவின் தியான்ஜினில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கு இன்னும் சலுகை காட்ட ரஷ்யா முன்வந்துள்ளது. இந்தியா விரைவில் ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடும் எனவும், மேலும் S-400 தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளையும் பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிடமிருந்து இந்தியா கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், மலிவான விலையில் எண்ணெய் மற்றும் S-400 அமைப்புகளை ரஷ்யா வழங்குவதாகத் தெரிவித்துள்ளது அமெரிக்காவிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்றப்படவுள்ள சரக்குகளுக்கான சலுகைகளைப் பெற்றவர்களை மேற்கோள் காட்டி, ஒரு பீப்பாய் யூரல்ஸ் கச்சா எண்ணெய் இப்போது பிரெண்டைவிட $3–$4 குறைவாக உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு பீப்பாய்க்கு சுமார் $2.50 ஆகவும், ஜூலையில் சுமார் $1 ஆகவும் தள்ளுபடி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு ரஷ்யாவின் எண்ணெய் விநியோகம் 10–20% அல்லது ஒருநாளைக்கு கூடுதலாக 1,50,000 முதல் 3,00,000 பீப்பாய்கள் வரை அதிகரிக்கும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் (2022) தொடங்கியது முதல் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா குறைந்த விலையில் வாங்கிப் பயன்படுத்தி வருகிறது. சீனாவிற்குப் பிறகு ரஷ்யாவின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய்யை வாங்குபவராக இந்தியா உருவெடுத்துள்ளது. இன்று, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா சுமார் 37% வழங்குகிறது என்று தரவு நிறுவனமான கெப்ளர் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளதால் 2022 முதல் ஜூன் 2025 வரை குறைந்தது 17 பில்லியன் டாலர்களை இந்தியா சேமித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல், இந்தியா 39 மாதங்களில் நேரடி சேமிப்பில் குறைந்தது 12.6 பில்லியன் டாலரை ஈட்டியுள்ளது என்றும், மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணெய் கொள்முதல் மூலம் மிக அதிக மறைமுக ஆதாயங்களையும் பெற்றுள்ளது என்றும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வர்த்தக தரவுகளின் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. மற்ற நிபுணர்களும் அறிக்கைகளின் ஆய்வைக் கருத்தில்கொண்டு 13 பில்லியன் டாலர்களிலிருந்து 26 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடுகின்றனர். இதில், உண்மையான சேமிப்பு எந்த அளவு எனத் தெரியவில்லை. ஒருவேளை, ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முன் வந்திருக்காவிட்டால், உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக உயர்ந்திருக்கும். தவிர, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கான செலவும் பன்மடங்கு உயர்ந்திருக்கும்.
மறுபுறம், கடந்த மூன்று தசாப்தங்களாக, விண்வெளி, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளில் ரஷ்யாவுடனான தனது கூட்டாண்மையை இந்தியா ஆழப்படுத்தியுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) மார்ச் மாத அறிக்கையின்படி, ரஷ்யா இன்னும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத சப்ளையராக உள்ளது. இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யா முன்னணியில் உள்ளது. 2020 -2024ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36 சதவீதம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்தியா ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வாங்கி வருகிறது. மேலும் இருவரும் உள்நாட்டில் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை தயாரிக்க ஒரு கூட்டு முயற்சியை அமைத்துள்ளனர். அந்த வகையில், கடந்த 2018ஆம் ஆண்டில் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்தம் 5 எண்ணிக்கையிலான எஸ் 400 கவச அமைப்புகளை நமது அரசு வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி 3 எண்ணிக்கை எஸ் 400 கவச அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், மீதியுள்ள இரண்டு எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளும் அடுத்த ஆண்டு முதல் ரஷ்யா வழங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஒரு எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பும், அதன்பிறகு 2027இல் இன்னொரு எஸ் 400 வான்வெளி பாதுகாப்பும் நம் நாட்டுக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது. இவை தவிர, ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 வான்வெளி அமைப்பை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய - ரஷ்ய உறவு என்பது இன்று நேற்றல்ல பல தசாப்தங்களாகத் தொடருகிறது. அதைத் தற்போதைய பிரதமர் மோடியும் கடைப்பிடித்து வருகிறார். அந்த வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரடியாக விமர்சிப்பதை இந்தியா தவிர்த்து வருகிறது. அதுபோல், உக்ரைன் போரைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் கலந்துகொள்ளாமல் உள்ளது மற்றும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் சேர மறுத்துவிட்டது.
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகம் சாதனை அளவாக 68.7 பில்லியன் டாலர்களைத் தொட்டது. இந்தியா, ரஷ்யாவிற்கு 4.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் ஆதிக்கம் செலுத்தும் இறக்குமதி 63.8 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இந்தியாவில் ரஷ்ய முதலீடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோ கெமிக்கல்ஸ், வங்கி, ரயில்வே மற்றும் எஃகு ஆகியவற்றில் உள்ளன. அதே நேரத்தில் இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவில் எரிசக்தி மற்றும் மருந்துத் துறையில் முக்கியமாக கவனம் செலுத்துகின்றன.