வெற்றி தினக் கொண்டாட்டத்தின் காரணமாக, கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஷ்யா தன் ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆம், போர் நிறுத்தத்திற்குப் பிறகு ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை தோற்கடித்து அப்போதைய சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே 9ஆம் தேதி வெற்றி தினமாக ரஷ்யாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போதைய சோவியத் யூனியனில் ரஷ்யாவும், உக்ரைனும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றி தினக் கொண்டாட்டத்தின் காரணமாக, கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களான ரஷ்யாவின் விளாடிமிர் புதினும், உக்ரைனின் ஜெலன்ஸ்கியும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். தவிர, போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பரஸ்பர கைதிகளின் பரிமாற்றமும் நடைபெறும் எனக் கூறப்பட்டது. ஆயினும், போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது இரு தரப்பினரும் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், முன்னணிப் பகுதியில் சண்டை தொடர்ந்ததாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஷ்யா தன் ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆம், போர் நிறுத்தத்திற்குப் பிறகு ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா 216 ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவற்றில் 192 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இதனால், போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கையும் மங்கியுள்ளது.