உலகம்

’பொதுமக்கள் 7 பேர் பலி, இந்திய மாணவர்கள் தவிப்பு’ - ரஷ்ய தாக்குதல் குறித்து புதிய தகவல்கள்

Veeramani

ரஷ்யாவின் தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது, இந்த சூழலில் நாடு திரும்ப முடியாமல் இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

ராணுவ தளங்களை மட்டுமே தாக்குவதாக ரஷ்யா கூறிய நிலையில், பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு என உக்ரைன் குற்றச்சாட்டியுள்ளது

ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்தியர்களை அழைப்பதற்காக உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் போர் நடப்பதால் பாதிவழியில் திரும்பி வந்துவிட்டது. இந்த நிலையில் உக்ரைனிலுள்ள இந்திய தூதரக வளாகத்தில் மாணவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேற்கு உக்ரைன் பகுதி பாதுகாப்பாக இருப்பதால் பிற பகுதிகளில் இருந்து அங்கு மக்கள் குவிந்து வருகின்றனர்.

முன்னதாக, உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அத்துடன், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண் அறிவிக்கபட்டதோடு, டெல்லியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 1800118797 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து இருந்தது. அத்துடன், +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905 ஆகிய எண்களை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.