நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவ விமானத் தளங்கள் மீது உக்ரைன் முதன்முறையாக உக்கிரமான தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் ராணுவம், ஸ்பைடர்வெப் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் கீழ், ரஷ்யாவின் உள் பகுதிகளில் உள்ள இர்குட்ஸ்க், முர்மான்ஸ்க், இவானோவோ, ரயசான் மற்றும் அமூர் ஆகிய ஐந்து ராணுவ விமானத் தளங்களை இலக்காகக் கொண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற ரஷ்யாவின் TU-95, TU-22M, A-50 போன்ற முக்கிய ராணுவ விமானங்கள் உள்பட 41 விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு படையால் 18 மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டு, அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நேரடி மேற்பார்வையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷ்யா மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலை புத்திசாலித்தனமானது என்றும், மிகப்பெரிய ராணுவ முயற்சிகளில் ஒன்று என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் நடைபெற்ற திட்டமிடலையும் அவர் பாராட்டினார். மறுபுறம், உக்ரைன் நடத்திய இந்த தாக்குதலால், ரஷ்யாவின் நீண்ட தூர ஏவுகணை திறனில் 34 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உக்ரைனின் இந்த உக்கிரமான தாக்குதலால், இரு நாடுகளுக்கிடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.