உலகம்

“காட்டுத்தீ மீட்புப் பணியில் இருக்கிறேன்” - கோல்டன் குளோப் விருது விழாவில் கவனம் ஈர்த்த நடிகர்!

webteam

பன்முக நடிப்பை ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய ஜாக்கின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்றார்.

ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற 77-வது கோல்டன் குளோப் விழாவில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள், தொலைக்காட்சி தொடர் நடிகர்கள், திரையுலகினர் என பலர் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன் கணவர் நிக் ஜோகஸுடன் கலந்து கொண்டார். அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய விழாவில் சிறந்த படமாக 1917 என்ற திரைப்படம் தேர்வானது. சாம் மெண்டஸ் இயக்கிய 1917 என்ற திரைப்படம் போர் தொடர்பான படமாகும். இதே படத்துக்காக சிறந்து இயக்குநருக்கான விருதையும் சாம் மெண்டஸ் பெற்றார். வெகுளி, கோபம் என பன்முக நடிப்பை ஜோக்கர் திரைப்படத்தில் வெளிப்படுத்திய ஜாக்கின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை ஜூடி படத்திற்காக ரீனி ஸெல்வகர் பெற்றார்.

சிறந்த நடிப்புக்கான விருதை வென்ற ரஸ்ஸல் குரோவா நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆனாலும் அவர் அனுப்பிய செய்தி அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆஸ்திரேலியா தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஸ்ஸல், காட்டுத்தீ மீட்புப்பணியில் இருப்பதால் தன்னால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். ரஸ்ஸல் குரோவாவின் இந்த செயலுக்கு ஹாலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.