பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில், வியாடினா-19 (Viotina 19) என்ற பசு, ஏலம் விடப்பட்டது. இந்தப் பசு, சுமார் 41 கோடி ரூபாய்க்கு (டாலர் 4.8 மில்லியன்) ஏலம் போனது. இதன்மூலம், அந்தப் பசு உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையான பசு என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.
இந்த பசுவின் எடை 1,101 கிலோ ஆகும். அதாவது, இந்தப் பசு அதன் இனத்தில் உள்ள மற்ற பசுக்களின் சராசரி எடையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். முன்னதாக, இந்தப் பசு பல்வேறு சாதனைகளையும் படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் விதிவிலக்கான தசை அமைப்பு மற்றும் அரிய மரபணு பண்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டது.
அடுத்து, சாம்பியன்ஸ் ஆஃப் தி வேர்ல்டு போட்டியில், மிஸ் சவுத் அமெரிக்கா பட்டத்தை அது வென்றுள்ளது. அதன் உயர்ந்த மரபணு பரம்பரை காரணமாக இந்த பசுவின் கருக்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் ஓங்கோல் இனம் என்று அழைக்கப்படும் நெல்லூர் இனம், 1800களில் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தப் பசுக்கள் அதிக மீள்தன்மை கொண்டவை, தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டவை மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளன, இதனால் கால்நடை வளர்ப்புத் துறையில் அவை மிகவும் விரும்பப்படுகின்றன.