உலகம்

‘தென்னிந்தியாவிலிருந்து வந்த சிறிய படம்.. ’ -நியூயார்க்கில் விருதுபெற்ற ராஜமௌலி நெகிழ்ச்சி

சங்கீதா

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் ராஜமௌலி, தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறியப் படத்தை உலகம் முழுவதும் பல பேர் கவனிக்கும் வகையில் தெரியப்படுத்தியதற்காக மேடையில் விழாக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவானத் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், ரூ.1150 கோடிக்கு மேல் வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பிரத்யேகமாக இந்தப் படம் வெளியிடப்பட்டு வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், 95-வது ஆஸ்கர் விருது விழாவுக்கு சர்வதேச திரைப்படங்கள் பிரிவில், இந்தியாவில் இருந்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், குஜராத்திப் படமான ‘செல்லோ ஷோ’ தேர்வானது. எனினும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படக்குழு தனிப்பட்ட முறையில் 14 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், ‘நாட்டுக்கூத்து’ பாடல் (Original Song) நாமினேஷனுக்கு முந்தைய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வருகிற 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதேபோல், மற்றொரு உயரிய விருதான கோல்டன் குளோப் விருதுக்கு, ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் தேர்வானது. மேலும்  ‘நாட்டுக்கூத்து’ பாடல், சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகியுள்ளன. வரும் 10-ம் தேதி (இந்திய நேரப்படி ஜனவரி 11-ம் தேதி அதிகாலை) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்காக இயக்குநர் ராஜமௌலிக்கு அறிவிக்கப்பட்டது. அவருடன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அர்னோஃப்ஸ்கை, சாரா போலி, ஜினா பிரின்ஸ் பிளைத்வுட் போன்ற பிரபல இயக்குநர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த விருது ராஜமௌலிக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழா நியூயார்க் நகரில் நடைபெற்றது. அதில் தனது மனைவியுடன் கலந்துகொண்ட ராஜமௌலி, சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

அவர் விருது பெறுவதற்காக எழுந்து செல்லும் போது, விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களின் கரகொலியால் அரங்கமே அதிர்ந்தது. விருதுபெற்றுக்கொண்ட ராஜமௌலி பின்னர் பேசுகையில், “உங்களிடமிருந்து இந்த விருதைப் பெறுவது எனக்கு மிகப்பெரிய கௌரவம். இது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த விருதை வழங்கி எனதுப் படத்தின் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் குழுவினரை கௌரவித்துள்ளீர்கள், மேலும் தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறியப் படத்தை நிறைய பேர் கவனிக்க வைத்துள்ளீர்கள்.

இப்படி ஒரு துறை இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது, ஆனால் இப்போது இந்த விருது காரணமாக, தற்போது பலர் இதைப் பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு இந்தியாவில் பார்வையாளர்களிடமிருந்து என்ன வரவேற்பு கிடைத்ததோ, அதே வரவேற்பு மேற்கு நாடுகளிலும் கிடைத்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

திரையரங்குகளில் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களை நான் பார்த்தபோது அவர்களது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி, பிரமிப்பு. அவர்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். திரையரங்கில் படத்தைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியைத்தான் எனது பார்வையாளர்களிடமிருந்து நான் பார்க்க விரும்புகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.