உலகம்

ஆஸ்கர் இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் ‘ஆர்ஆர்ஆர்’ நாட்டு பாடல், ‘செல்லோ ஷோ’ படம்!

சங்கீதா

ஆஸ்கர் விருதுகளின் இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியலில், இந்தியாவில் இருந்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் நாட்டுக்கூத்து பாடலும், குஜராத்திப் படமான ‘செல்லோ ஷோ’ திரைப்படமும் தேர்வாகியுள்ளன.

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விருதுக்கு சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ திரைப்படமும், தனிப்பட்ட முறையில் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’, மற்றும் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ ஆகியப் படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இதில் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் 14 பிரிவுகளில் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸ்கார் விருதில் டாக்குமெண்டரி (15), வெளிநாட்டு படங்கள் (15), மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் (10), ஒலி (10), பாடல் (15), பின்னணி இசை (15), அனிமேஷன் (10) உள்பட முதல் 10 பிரிவுகளுக்கான இறுதிச் சுற்று தேர்வுப் பட்டியலை, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் மிகவும் வரவேற்புப் பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல், இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியலில் தேர்வாகியுள்ளது. நாட்டுக்கூத்து பாடலுடன், ‘அவதார் 2’ படத்தின் “Nothing is Lost (You Give Me Strength)” உள்பட 15 பாடல்கள் இறுதிப் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 81 பாடல்களில் இருந்து இந்த 15 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில், 92 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களில், குஜராத்திப் படமான ‘செல்லோ ஷோ’ உள்பட 15 படங்கள் தேர்வாகியுள்ளன. இந்தியாவிலிருந்து சென்றப் படங்கள் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், ஜனவரி 12 முதல் 17 வரை, பரிந்துரைக்களுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறும். அதன்பிறகு ஜனவரி 24-ம் தேதி நாமினேஷன் பட்டியல் அறிவிக்கப்பட்டு, மார்ச் 12-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.