மியான்மரில் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறைகளுக்கு அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சியின் நீண்ட மவுனமே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மக்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார் சூச்சி.
மியான்மரின் ரோஹிங்யா இஸ்லாமியருக்கு எதிரான சமீபத்திய வன்முறைகள் தொடங்கிய பிறகு அதுகுறித்து முதல்முறையாகக் கவலை தெரிவித்திருக்கிறார் அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் ஆங் சான் சூச்சி. ஆனாலும் ரோஹிங்யா இஸ்லாமியர் பாதிக்கப்படுகிறார்கள்; அவர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று அவர் அறிவித்துவிடவில்லை. பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் வருந்துவதாக பொதுவாகப் பேசியிருக்கிறார். பௌத்தர்களும் வன்முறைகளால் பாதிக்கப்படுவதாக மறைமுகமாகக் குறிப்பிடுவதே சூச்சியின் நோக்கம் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எனினும் வன்முறைகள் காரணமாக வீடுகளைவிட்டு வெளியேறி வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்கிறார்கள் என்பதை முதல் முறையாக சூச்சி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ரோஹிங்யா இஸ்லாமியரின் நிலை குறித்து உலகமெங்கிலும் இருந்து மியான்மருக்குக் கண்டனங்கள் வந்திருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற பெரும் பொருளாதார நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் ரோஹிங்யா இஸ்லாமியர் விவகாரத்தை எழுப்பி கடுமையான குரலில் பேசியிருக்கின்றன. இப்படியொரு நெருக்கடியான சூழலில், தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காக தலைநகர் நேப்பிதாவில் சூச்சியின் உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரோஹிங்யா மக்களின் பூமியான ராக்கைன் மாநிலத்துக்குள் இதுவரை சர்வதேசப் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சர்வதேச அரசியல் அழுத்தங்கள் இந்த நிலையை மாற்றியிருக்கின்றன. பணிந்திருக்கும் சூச்சி, சர்வதேசப் பார்வையாளர்கள் தாராளமாக ராக்கைன் மாநிலத்துக்கு வரலாம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். உலக நாடுகளின் விமர்சனங்களைக் கண்டு மியான்மர் ஒருபோதும் அஞ்சாது என்றும் சூச்சி குறிப்பிட்டிருக்கிறார். ரோஹிங்யா இஸ்லாமியர் விவகாரத்துக்கு சூச்சியின் உரையில் நேரடியான தீர்வு எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும், சர்வதேச அழுத்தங்களை மியான்மர் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது என்பதை அவரது உரை உணர்த்துகிறது.