உலகம்

வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி தப்பினார், 10பேர் பலி

Veeramani

ஆப்கானிஸ்தான், காபூலில் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேவை குறிவைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில், அவர் உயிர்தப்பினார். ஆனால் இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபானுக்கும் இடையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு சற்று முன்னதாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் தலிபான்கள் இந்த தாக்குதலை தாங்கள் செய்யவில்லை என மறுத்துள்ளனர். "இன்று, மீண்டும் ஆப்கானிஸ்தானின் எதிரிகள் சலேவை கொல்ல முயன்றனர். ஆனால் தாக்குதலில் இருந்து சலே தப்பியுள்ளார் என்று சலேவின் அலுவலக செய்தித் தொடர்பாளர் ரஸ்வான் முராத் பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

மேலும் சலேவை குறிவைத்து வெடிகுண்டு வீசியதாகவும், இதில் அவரது மெய்க்காப்பாளர்கள் சிலர் காயமடைந்ததாகவும் கூறினார்.  அதன்பின் அம்ருல்லா சலே தனது சமூக ஊடக கணக்குகளில் ஒரு வீடியோவில் தோன்றினார். அவர் முகத்தில் ஒரு சிறிய தீக்காயமும், தாக்குதலில் அவரது கையில் காயமும் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இந்த குண்டுவெடிப்பில் தலிபான் போராளிகள் ஈடுபடவில்லை என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.