இந்தியாவை அலங்கரிக்கும் குளிர்பான வகைகளில், கோலி சோடாவும் ஒன்று. தனித்துவமான கண்ணாடி பளிங்கு சீல் செய்யப்பட்ட பாட்டில்களுக்கு பெயர் பெற்ற இந்த கோலி சோடா, கிராம் முதல் நகரம் முதல் என எல்லாக் கடைகளிலும் நிரந்த இடத்தைப் பிடித்து வருகிறது. என்றாலும், 1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்சி, கோகோகோலா போன்றவை இந்திய சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. குறைந்த விலையிலும், கவர்ச்சியான பிளாஸ்டிக் பாட்டில்களிலும் அடைக்கப்பட்ட இந்த பானங்களுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கிய நிலையில், கோலி சோடா மெல்லமெல்ல காணாமல் போகத் தொடங்கியது.
இந்த நிலையில், கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் மவுசு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய சந்தைகளில் புளூ பெர்ரி, ஆரஞ்சு, லெமன், ஜிஞ்சர் என பலவகைகளில் கோலி சோடாக்கள் தற்போது விற்கப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகளிலும் கோலி சோடாவுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது.
இதையடுத்து, மத்திய வர்த்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஆணையமான அபிடா, கோலி பாப் சோடா என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை தொடங்கியுள்ளது. லுலு மார்க்கெட் மூலம் வளைகுடா நாடுகளில் கோலி சோடாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சர்வதேச சந்தைகளில் கோலி சோடா மீண்டும் ஒரு வலுவான இடத்தைப் பிடித்திருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.