உலகம்

47 ஆண்டுகளுக்குப் பின் நாடு விட்டு நாடு கடந்து வீடு வந்த மோதிரம்

webteam

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவ‌ர் 47 ஆண்டுகளுக்கு முன் பின்லாந்தில் தொலைத்த மோதிரம் தற்போது கிடைத்துள்ளது.

போர்ட்லாந்தில் வசித்து வரும் டெப்ரா மெகன்னா என்ற அந்தப் பெண், கடந்த 1973-ஆம் ஆண்டு தனது பள்ளிப் பருவத்தின்போது, சுமார் 7736 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பின்லாந்து காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவரது காதலரும், பின்னாளில் கணவரானவர் கொடுத்த மோதிரத்தை தொலைத்துள்ளார்.

இந்த நிலையில் டெப்ரா மெகன்னாவுக்கு அண்மையில் பார்சல் ஒன்று வந்துள்ளது. அதில் தான் தொலைத்த அந்த மோதிரம் இருந்ததை கண்டு அதிசயித்தார். பின்லாந்து காட்டில் உலோக ஆய்வு செய்தவருக்கு மோதிரம் கிடைத்த நிலையில், அதை டெப்ரா மெகன்னாவுக்கு அனுப்பியுள்ளார்.

மோதிரத்தில் டெப்ரோ படித்த பள்ளியின் பெயர் இருந்ததை வைத்து அவரின் முகவரியை ஆய்வாளர் கண்டுபிடித்து அனுப்பியதும் தெரியவந்தது. மறைந்த தனது காதல் கணவர் நினைவாக கிடைத்த மோதிரத்தால், டெப்ரா மெகன்னா மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தன்னுடைய கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்ட நிலையில், 47 ஆண்டுகளுக்கு பின் சுமார் 4000கிமீ தூரத்தைக் கடந்து அவர் கொடுத்த மோதிரம் தன்னிடம் வந்தது சொல்லமுடியாத உணர்வைத் தருவதாக மெகன்னா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.