உலகம்

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய மோட்டார் சைக்கிள்... காரணம் தெரிந்தது

webteam

ஓட்டுனர் இல்லாமல் பிரான்ஸ் நெடுஞ்சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் எப்படி ஓடியது என்ற காரணத்தை பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று ஒரு மாதத்திற்கு பின்னர் கண்டறிந்துள்ளது. 
பிரான்ஸில் இருந்து வெளிவரும் லா பரீசியன் (Le Parisien), சமூக வலைதளங்களில் கடந்த மாதம் பதிவிட்ட வீடியோ ஒன்று நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி என்ன அந்த வீடியோவில் இருந்தது என கேட்கிறீர்களா? ஓட்டுனர் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஒன்று பிரான்ஸ் நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் பயணித்ததே நெட்டிசன்கள் அதிர்ந்ததற்கு காரணம். மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஒன்று, தானியங்கி மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததே என்றும், இல்லையில்லை மனித சக்திக்கு மீறிய சக்தியே அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டியது எனவும், பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. 
வீடியோவை வெளியிட்ட பத்திரிகை நிறுவனமே, அந்த மர்மத்துக்கான முடிச்சை தற்போது அவிழ்த்துள்ளது. வீடியோவில் இடம்பெற்றிருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விபத்தில் காயமடைந்துவிட்டார். மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்த பின்னரும், அந்த வாகனம் தொடர்ச்சியாக பலநூறு மீட்டர்கள் பயணித்து, அதன்பின்னர் சாலையோரத் தடுப்பில் மோதியதாக அந்த பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளானது தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது ஓட்டுனர் இல்லாமல் பலநூறு மீட்டர்கள் பயணிப்பது இயல்பானதே என்று மோட்டார் சைக்கிள் சாகச வீரர் ஜீன் பெர்ரி கோய் கூறுகிறார். இதன்மூலம் கடந்த ஒரு மாதமாக பிரான்ஸ் நெட்டிசன்கள் குழம்பியதற்கு விடை கிடைத்துள்ளது.