அமெரிக்காவிலிருந்து திரும்பும் இந்திய மக்கள் புதியதலைமுறை
உலகம்

இந்தியர்கள் கை விலங்கு போடப்பட்டு அழைத்துவரப்பட்ட விவகாரம்; ஜெய்சங்கர் சொன்னதென்ன?

சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல... 2009, 2010 என பல முறை சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது- ஜெய்சங்கர்

Jayashree A

அமெரிக்காவின் அராஜக செயல்... இந்தியர்களை தேசதுரோகி போன்று அவர்களின் கைகளையும் கால்களையும் விலங்கால் இணைத்து அமெரிக்காவின் இராணுவவிமானத்தில் அனுப்பிய சம்பவம் இந்தியர்களை கொந்தளிக்கவைத்துள்ளது. கைவிலங்கிடப்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தல் விமானத்தில் ஏறும் வீடியோவை அமெரிக்க எல்லைரோந்து பிரிவு பகிர்ந்துள்ளது.

குடியேற்றச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுவதை அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதல் வேலையாக, தங்களது நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி இருப்பவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன்படி, அமெரிக்க எல்லை அதிகாரிகள் 104 இந்தியர்களை கை விலங்கு மற்றும் கால் விலங்கு பூட்டி அமெரிக்க இராணுவ விமானத்தின் மூலம் பஞ்சாபின் அமிர்தசரஸில் இறக்கி விடப்பட்டனர்.

அமெரிக்க எல்லை அதிகாரிகளில் ஒருவரான டபிள்யூ பேங்க்ஸ் கைவிலங்கு பூட்டிய இந்தியர்கள் 104 பேரை அமெரிக்க விமானத்தில் ஏறுவதை காட்டும் வீடியோவை வெளியிட்டு, ”USBP மற்றும் கூட்டாளிகள் சட்டவிரோத வெளிநாட்டினரை இந்தியாவிற்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பினர், இது இராணுவ போக்குவரத்தைப் பயன்படுத்தி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட நாடுகடத்தல் விமானமாகும் . குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் விரைவான வெளியேற்றங்களை உறுதி செய்வதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை இந்த பணி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று தனது X இல் ஒரு பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த இந்திய மக்கள், அமெரிக்காவின் இத்தகைய செயல் மனிதாபிமானமற்றது... என்று கொதித்து எழுந்துள்ளனர். மேலும் இந்தியர்களை ஏன் அமெரிக்க இராணுவ விமானானங்களில் கூட்டி வரவேண்டும்? அவர்களை பயணிகள் விமானத்திலேயே கூட்டி வரலாமே? அவர்கள் என்ன சிறைக்கைதிகளா... கைவிலங்கு பூட்ட...என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி இதற்கு இந்திய அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து விளக்கம் அளிக்கையில்,

நாடுகடத்தப்படுபவர்கள் தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்வோம்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளிநாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டால், தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துச் செல்வது அனைத்து நாடுகளின் கடமையாகும்... சட்டவிரோதமானவர்களுக்கு கைவிலங்கு போடுவது அமெரிக்க அரசாங்கக் கொள்கை..

சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல... 2009, 2010 என பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

நேற்று திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தாங்கள் அனுபவித்த வேதனையை பகிர்ந்துள்ளனர். இந்தியர்களை தவறாக நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கூறியுள்ளோம் . கை கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் அவர்களால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர். இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.