ஐக்கிய நாடுகள் சபை REUTERS
உலகம்

ஒழிக்கப்படுகிறதா மரண தண்டனை? ஐ.நா.வில் தீர்மானம்! எதிர்த்த இந்தியா!

உலகம் முழுவதும் மரண தண்டனை முறையை ஒழிப்பதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்த ஐக்கிய நாடுகள் சபை. ஆதரவு பெருகியதா? எதிர்ப்பு கிளம்பியதா?.. இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

PT WEB

தீவிர குற்றங்கள் தீர விசாரிக்கப்பட்ட பிறகு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய ஒன்று. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாமே அன்றி, உயிர் பறிக்கக் கூடாது என்பது ஒரு தரப்பு வாதமாக இருந்துவருகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அரபு நாடுகளில் சிறு குற்றங்களுக்குக் கூட மரண தண்டனை விதிக்கும் சட்டங்கள் அமலில் உள்ளன. இப்படி மரண தண்டனை அந்தந்த நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டு எனும் நிலையில், மரண தண்டனை ஒழிக்க வேண்டுமென்ற குரல் ஐ.நா. சபையில் எழுந்திருக்கிறது.

2025 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் மரண தண்டனை நிறைவேற்றம் கணிசமாக அதிகரித்திருப்பதாகக் கூறி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது மெக்சிகோ. மரண தண்டனையை முதலில் ஒழிக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டுமென்பதே தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும். அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க தண்டனையை தீர்மானிக்கலாம். அவரவர் சொந்த சட்ட அமைப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், மரண தண்டனை விதிக்கப்படுவது கவலையை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறது மெக்சிகோவின் அந்த தீர்மானம்.

அதிலும் குறிப்பாக 18 வயதுக்கு குறைவானவர்கள், அல்லது 18 வயதில் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என தீர்மானம் வலியுறுத்துகிறது. கர்ப்பிணிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு மரண தண்டனை கட்டாயமாகப்படுவதை நீக்க வேண்டுமென தீர்மானம் சொல்லுகிறது. இவை அனைத்திற்கும் அடிப்படை, மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு நீளக்கூடிய குற்றங்களையெல்லாம் படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதே தீர்மானத்தின் மூலம் கோரப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை

இந்த தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் ஆதரவு பெருகியது. 133 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன், மாலத்தீவு, ஈராக் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 16 நாடுகள் தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை. சித்திரவதை, கொடுமை ஆகிய வார்த்தைகளுடன் தொடர்புபடுத்திய தீர்மானத்தின் வார்த்தைகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வழங்கப்படும் மரண தண்டனையை, சட்டவிரோத கொலைகளுடன் ஒப்பிடக் கூடாது என்பதே இந்தியாவின் வாதமாக உள்ளது.

அந்த வகையில், தீர்மானத்தின் போது ஐ.நா. குழுவில் பேசிய இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பாவிகா மங்கலானந்தன், மரண தண்டனையை ‘அரசு திணிக்கும் மரணம்’ எனக் குறிப்பிடுவது கேலிக்கூத்து. இந்த அணுகுமுறை நேர்மையற்ற, விஷமத்தனமானது. தனிப்பட்ட சித்தாந்த விருப்பங்களை நிலைபெற்ற சர்வதேச சட்டமாக்கும் முயற்சி இது என பேசினார். மேலும் மரண தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே விதிக்கப்படுவதாகக் கூறி தனது எதிர்ப்பை இந்தியா பதிவு செய்துள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான நாடுகள் வாக்களித்ததால் தீர்மானம் ஐ.நா. சபையில் நிறைவேறியிருக்கிறது.