உலகம்

கலிபோர்னியா: கரடியை வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஆளுநர் வேட்பாளர்!

EllusamyKarthik

இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி வாகை சூடியவர்கள் பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாக்காளர்களை கவர்வதற்காக கரடியை வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளரான ஜான் காக்ஸ். தொழிலதிபரான அவர் குடியரசு கட்சி சார்பில் கலிபோர்னியா ஆளுநர் தேர்தலில் வேட்பாளராக களம் காண்கிறார். இந்த கட்சி முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உறுப்பினராக உள்ள கட்சியாகும். 

வழக்கமாக தேர்தல் என்றாலே வாக்காளர்களை கவர பிரச்சாரத்தில் புதுவிதமான யுக்திகளை கையாளுவார்கள் வேட்பாளர்கள். அந்த வகையில் காக்ஸ் 453 கிலோ எடை உள்ள கரடி ஒன்றை வாடகைக்கு எடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

‘மீட் தி பீஸ்ட்’ என்ற பெயரில் கரடியை வைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் அவர். கரடியுடன் அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அதிகளவில் கூடுகிறதாம். இருப்பினும் அவர்கள் கரடியை காணவே குவிவதாக தெரிகிறது. இருப்பினும் அது தனக்கு போதும் என்கிறாராம் அவர். 

சிலர் மிருக வதை என குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் அதை கண்டும் காணமால் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகிறார் ஜான் காக்ஸ்.