அமெரிக்காவில் உள்ள 'யூனியன் சிலை' என்று அழைக்கப்படும் 90 அடி உயர அனுமன் சிலை குறித்து டெக்சாஸ் குடியரசுக் கட்சித் தலைவர் ஒருவர் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸின் சுகர் லேண்டில் உள்ள ஸ்ரீஅஷ்டலட்சுமி கோவிலில் 90 அடி உயர அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட இது, வட அமெரிக்காவின் மிக உயரமான இந்து நினைவுச் சின்னங்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்காவின் ’ஒற்றுமை சிலை’ என அழைக்கப்படும் இது, அந்நாட்டின் மூன்றாவது உயரமான சிலை என அறியப்படுகிறது. ராமர் மற்றும் சீதா தேவியை மீண்டும் இணைப்பதில் ஹனுமனின் பங்கை நினைவுகூரும் வகையில் இதற்கு 'ஒற்றுமை சிலை' எனப் பெயரிடப்பட்டது. ஆனால், சமீபகாலமாக இச்சிலைக்கு எதிர்வினையாற்றாப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இதுகுறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்தன.
அப்போது, ஆண்ட்ரூ பெக் என்ற பயனர் ஒருவர், ’இந்தச் சிலை அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ நாகரிகத்துடன் ஒத்துப்போகுமா’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த பயனர்கள், ‘அமெரிக்கா கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டது; இது ஒருபோதும் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது; அதற்குப் பதில் இயேசு அல்லது கன்னி மேரியின் சிலையை நிறுவியிருக்க வேண்டும்' எனப் பதிவிட்டனர். மேலும் சிலர், ’மலைகளின் உச்சியில் உள்ள சிலைகளை அகற்ற வழக்கு தொடுபவர்கள் இதை அகற்ற ஏன் வழக்கு தொடுக்கவில்லை’ என்கிற வாதங்களும் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, ’இந்து மதம் மேற்கத்திய நாகரிகத்திற்கு முற்றிலும் எதிரானது அல்ல. அவர்கள் நம் கலாசாரத்தை அழிக்க முற்படுவதில்லை. அவர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் நம்முடன் அமைதியாக இணைந்து வாழ்கிறார்கள். இது ஒரு பிரச்னையும் இல்லை’ எனப் பதிவுகளும் வைக்கப்பட்டன.
இப்படி அந்த விவாதம் அப்போது ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அதற்கு டெக்சாஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் டங்கன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "டெக்சாஸில் இந்துக் கடவுளின் ஒரு பொய்யான சிலையை ஏன் அனுமதிக்கிறோம்? இது, ஒரு கிறிஸ்தவ நாடு" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பைபிளை உதாரணம் காட்டி, "என்னைத் தவிர வேறு எந்தக் கடவுளும் உங்களுக்கு இருக்கக்கூடாது. வானத்திலோ, பூமியிலோ, கடலிலோ உள்ள எந்த ஒரு சிலையையோ அல்லது உருவத்தையோ நீங்களே உருவாக்கக்கூடாது" எனத் தெரிவித்தார். இதையடுத்து அவருடைய கருத்துகள் விரைவில் சமூக ஊடகங்களில் எதிர்வினைகளைப் பெற்றன. இந்து அமெரிக்க அறக்கட்டளை (HAF) இந்த அறிக்கையை ’இந்து எதிர்ப்பு மற்றும் எரிச்சலூட்டும் செயல்’ என்று அழைத்தது. மேலும் அந்தக் குழு இந்த சம்பவத்தை டெக்சாஸில் உள்ள குடியரசுக் கட்சியிடம் முறையாகப் புகாரளித்து, இந்த விஷயத்தைத் தீர்க்குமாறு வலியுறுத்தியது. மேலும் சில பயனர்கள், ‘அமெரிக்க அரசியலமைப்பு எல்லா மதத்தையும் பின்பற்ற சுதந்திரம் அளிக்கிறது’ என்பதை அவருக்கு நினைவூட்டினர்.
பயனர் ஒருவர், "நீங்கள் இந்து இல்லை என்பதற்காக அது பொய்யாகிவிடாது. இயேசு பூமியில் நடப்பதற்கு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் எழுதப்பட்டன, அவை அசாதாரண நூல்கள். மேலும் கிறிஸ்தவத்தின் மீது வெளிப்படையான தாக்கங்கள் உள்ளன. எனவே, உங்கள் மதத்திற்கு முந்தைய மற்றும் செல்வாக்கு செலுத்தும் 'மதத்தை' மதித்து ஆராய்ச்சி செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும்’ என எழுதினார்.