கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பாகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மே 7 ஆம் தேதி இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. SCALP க்ரூஸ் ஏவுகணைகள், HAMMER துல்லிய-வழிகாட்டப்பட்ட வெடிகுண்டுகள், லோட்டரிங் வெடிமருந்துகள் போன்றவை இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன. பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டது ராணுவ தளங்கள் அல்ல என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் ஆக்னூர் எல்லைப் பகுதியில், சிந்தூர் ஆபரேஷனில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ஏழு பெண் வீராங்கனைகள், மூன்று நாட்கள் மற்றும் மூன்று இரவுகள் தொடர்ந்து போராடி, இரண்டு முன்னணி இடங்களைப் பாதுகாப்பதில் சாதனை படைத்தனர். பாகிஸ்தானின் சியால்கோட்டில் இருந்து வந்த எதிரியின் ஏவுகனைகளை எதிர்த்து, வெற்றிகரமாகத் தங்களது நிலைகளை காப்பாற்றினர். கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு மேல் இருதரப்பிலும் பதற்றம் நீடித்தது. பின்னர் ஒருவழியாக இருதரப்பிலும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. இதில் அமெரிக்கா தலையீடு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிந்தூர் ஆபரேஷன் தாக்குதலுக்கு ஆளான பயங்கரவாக ஏவுகணை தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் மறுகட்டமைப்பு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுப்பிரிவு அமைப்பான ஐஎஸ்ஐ இதற்கான நிதியை அளிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லோர பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை சீர் செய்து வருவதாக தெரிகிறது. உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் அவை மேம்படுத்தப்படுவதாக தெரிகிறது. லூனி, புட்வால், திப்பு போஸ்ட், ஜமீல் போஸ்ட், உம்ரான்வாலி, சப்ரார் ஃபார்வர்டு, சோட்டா சக் மற்றும் ஜங்லோரா போன்ற பகுதிகளில் உள்ள முகாம்கள் தற்போது புரனமைக்கப்படுகிறது.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நடந்த ஒரு வாரத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் அளவிலான கடன் கொடுக்க ஒப்புதல் அளித்தது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழங்கப்படும் இந்த கடனை பாகிஸ்தானுக்கு வழங்க இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.