உலகம்

நாயுடன் புதைக்கப்பட்ட மனிதன்: கண்டுபிடிக்கப்பட்ட 8,400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு..!

Veeramani

தெற்கு ஸ்வீடனில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியில், மனிதர் ஒருவருடன் புதைக்கப்பட்ட நாயின் எலும்புகள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஸ்வீடனில் சொல்வெஸ்போர்க் நகருக்கு அருகிலுள்ள கற்கால மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் 8,400 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட நாயின் எலும்புகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கற்காலம் குடியேற்றத்தின் நடுப்பகுதி காலத்தில் இந்த புதைக்கப்பட்டிருக்கலாம்”என்று பிளெக்கிங்க் அருங்காட்சியகத்தின் எலும்பியல் நிபுணர் ஓலா மேக்னெல் கூறினார்.

ஸ்வீடிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த நாய் ஒரு நபருடன் புதைக்கப்பட்டதாகக் கூறினர், அந்த காலத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் தங்களின் மதிப்புமிக்க அல்லது உணர்ச்சிகரமான பொருட்களை வைத்திருப்பார்கள், இந்த நபர் தனது நாயை தன் அருகில் வைத்திருந்திருக்கிறார். “இத்தகைய கண்டுபிடிப்புகள் இங்கு வாழ்ந்த மக்களுடன் நம்மை இன்னும் நெருக்கமாக உணரவைக்கும். இந்த புதைக்கப்பட்ட நாய், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாய்கள்  எப்படி நமது துக்கம் மற்றும் இழப்பு போன்ற உணர்வுகளுடன் ஒன்றிணைந்து வாழ்கிறது என்பதைக் காட்டுகிறது." என்று அருங்காட்சிய திட்ட இயக்குநர் கார்ல் பெர்சன் கூறுகிறார்.

அகழாய்வில் கண்டறியப்பட்ட நாயின் எலும்புகள் இன்னும் தரையில் இருந்து அகற்றப்படவில்லை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ப்ளீக்கிங் அருங்காட்சியகத்திற்கு ஆய்வுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நாயின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, பரந்துப்பட்ட அகழாய்வு தளத்தின் ஒரு பகுதியாகும். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது இப்பகுதியில் மிகப்பெரிய தொல்பொருள் அகழாய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் கற்காலத்தில் வேட்டையாடுபவர்கள் வசித்ததாக நம்பப்படுகிறது.