மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, காங்கோ. இங்கு, பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் இந்த மோதலால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்று இயங்கி வரும் கிளர்ச்சிப் படையான 'எம்23' (M23), தெற்கு கிவூ மாகாணத்திலுள்ள கவுமு விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக இன்று (பிப்.14) தெரிவித்துள்ளது.
இதை, M23 கிளர்ச்சிப் படை செய்தித் தொடர்பாளர் லாரன்ஸ் கன்யுகா உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் 2வது விமான நிலையத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளது. எனினும், இத்தகவலை அந்நாட்டு அரசாங்கமோ அல்லது முக்கியத் தலைவர்களோ உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் வட கிவூ மாகாணத்தின் தலைநகர் கோமாவை கைப்பற்றிய எம்23 கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதன் பின்னர், தெற்கு கிவூ மாகாணத்தின் கவுமு விமான நிலையத்தை குறிக்கோளாகக் கொண்டு முன்னேறி வந்த அவர்கள் இன்று அதனைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
காங்கோவின் கனிம வளம் அதிகமுள்ள கிழக்குப் பகுதிகளின் கட்டுப்பாட்டிற்காக போட்டியிடும் 100க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் மிக முக்கியமான எம்23 (M23) கிளர்ச்சியாளர்கள், தெற்கு கிவு மாகாணத்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர். தொடர்ச்சியாக, கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையில் நடக்கும் தாக்குதல்களினால் தற்போது வரை 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா மற்றும் காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இன்று, பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் நெரிசலான தற்காலிக தங்குமிடங்கள், தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கியிருப்பதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘’வடக்கு மற்றும் தெற்கு கிவு மாகாணங்களில் உள்ள கோமா மற்றும் மினோவாவைச் சுற்றியுள்ள 70,000 முகாம்களைக் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் மூலம் கிளர்ச்சிப் படைகள் அழித்துள்ளன. இதனால் சுமார் 3,50,000 மக்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில், முகாம்களில் கூரை இல்லாமல் தவிக்கின்றனர்" என அது தெரிவித்துள்ளது.