அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தற்போதே அதைப் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களையும் அவ்வப்போது அறிவித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் என்பவரை, அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (FBI) அடுத்த இயக்குநராக ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது நியமனம் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினரிடையே எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. காரணம், FBI குறித்து அவர் அடிக்கடி விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் FBI இயக்குநராக நியமிக்கப்பட்டால், அந்த அமைப்பையே மாற்றியமைக்கும் நோக்கத்துடன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, எஃப்.பி.ஐ-க்கு மிகப்பெரிய மாற்றங்கள் தேவை என அடிக்கடி வலியுறுத்தும் படேல், அதன் அதிகாரத்தை குறைக்கவும், இடத்தை மாற்றவும் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, எஃப்.பி.ஐ.யின் உளவுத்துறை சேகரிப்பு நடவடிக்கைகளை அதன் மற்ற பணிகளில் இருந்து துண்டிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனாலேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, மத்திய புலனாய்வு நிறுவனத்தை (CIA) வழிநடத்த காஷ் படேலின் பெயர் அமெரிக்காவின் வாஷிங்டன் வட்டாரங்களில் வட்டமடித்தது. ஆனால் ட்ரம்ப் தனது நெருங்கிய கூட்டாளியான ஜான் ராட்க்ளிஃபை சிஐஏவை வழிநடத்த தேர்வு செய்தார். இதையடுத்து, அவரது அடுத்த தீவிர ஆதரவாளரான காஷ் படேலை இந்தப் பதவிக்கு நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப், “காஷ் படேல், எஃப்.பி.ஐயின் அடுத்த இயக்குநராகப் பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். காஷ் ஒரு சிறந்த வழக்கறிஞர், புலனாய்வாளர் மற்றும் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ (America First) என்பதை முக்கியமாக கருதும் ஒரு போராளி. அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஊழலை வெளிக்கொண்டுவதற்கும், நீதி மற்றும் அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காகவும் அயராது பாடுபட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எஃப்.பி.ஐ இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரேய் என்பவர் உள்ளார். இவரை நியமித்தவரே ட்ரம்ப்தான். கடந்த 2017ஆம் ஆண்டு 10 ஆண்டு காலத்திற்கு, கிறிஸ்டோபரை எஃப்.பி.ஐ இயக்குநராக ட்ரம்ப் நியமித்தார். தற்போது அந்தப் பதவிக்கு காஷ் படேல் அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, கிறிஸ்டோபரோ தன் பதவிக்காலம் முடியும் முன்னேரே அதிலிருந்து விலகலாம் அல்லது பதவி நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ட்ரம்ப்பின் முதலாம் ஆண்டு ஆட்சியில், ரகசிய பதிவுகளைக் கையாள்வது குறித்த அமெரிக்க அரசு விசாரணைக்கு எஃப்பிஐ உதவியது. இதையடுத்து, கிறிஸ்டோபருக்கு, ட்ரம்ப்பை ஆதரவு வழங்குவதை நிறுத்தினார். அதாவது, தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஆட்சியில், தன் மீதான வழக்குகளை எப்.பி.ஐ. கையாண்ட விதம் குறித்தும், அதன் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரேய் மீதும் கடுமையான விமர்சனங்களை ட்ரம்ப் முன்வைத்து வந்தார். இதன்காரணமாகவே, படேல் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எஃப்பிஐ அமைப்பு, "ஒவ்வொரு நாளும், அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாக்க எஃப்பிஐ ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இயக்குநர் வ்ரேயின் கவனம், எஃப்பிஐ-யின் ஊழியர்கள் மீது உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
நியூயார்க்கைப் பூர்விகமாகக் கொண்ட காஷ், ட்ரம்ப்பின் தீவிர விசுவாசியாவார். அவர், ஆரம்பத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2017இல் ஹவுஸ் இன்டலிஜென்ஸ் கமிட்டியின் மூத்த வழக்கறிஞராக காஷ் படேல் முக்கியத்துவம் பெற்றார், அங்கு அவர் குடியரசுக் கட்சியின் தலைமையிலான விசாரணையில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர், அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் மூத்த இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2016-இல் நடைபெற்ற அமெரிக்கா அதிபா் தோ்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்காற்றினாா். காஷ் படேல் தற்போது ட்ரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்தின் குழுவில் பணியாற்றி வருகிறார். இதன்மூலம் ஆண்டுதோறும் அவருக்கு குறைந்தபட்சம் டாலர் 120,000 வருமானம் வருகிறது. ‘Government Gangster’ உள்ளிட்ட சில நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் உறவு குறித்தும் விவரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.