உலகம்

அழிந்துபோன அரியவகை தைலாசின் புலி - வீடியோ பதிவு

webteam
 
நாயைப் போன்று இருக்கும் அரியவகை புலி ஒன்றின் வீடியோ வெளியாகியுள்ளது.
 
மனித சமூகம் தோன்றுவதற்கு முன்பே இந்தப் பூமியில் பலவகையான உயிரினங்கள் உயிர்வாழ்ந்துள்ளன. ஆனால் மனித நாகரிகத்தின் வளர்ச்சியாலும் இயற்கை சீற்றத்தாலும் பல உயிரினங்கள் அழிவை எட்டிவிட்டன. அப்படி ஒருவகையான உயிரினம்தான் டினோசர். இந்த இனம் இன்றும்  பூமியில் இல்லை. அதே போல் 1932 ஆண்டு வரை வாழ்ந்த அரிய வகை புலி ஒன்றின் வீடியோ பதிவு இப்போது கிடைத்துள்ளது. 
 
ஆஸ்திரேலியாவிலுள்ள தேசியத் திரைப்பட மற்றும் ஒலி காப்பகம் (என்.எஃப்.எஸ்.ஏ) அமைப்பு அறியப்பட்ட தைலாசின் அல்லது டாஸ்மேனியா புலி என்ற அரியவகை இன உயிரினம் ஒன்றின் வீடியோ பதிவை  ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 21 விநாடிகள் ஓடக்கூடிய கறுப்பு, வெள்ளையிலான அந்தப் பதிவு 1935 ஆம் ஆண்டில் டாஸ்மேனியா தி ஒண்டர்லேண்ட் என்ற பயணக் குறிப்பிற்காகப் படமாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்தக் காலத்தில் இந்த வீடியோவை பெஞ்சமின் என்பவர் இதனைக் காட்சியாகப் பதிவு செய்துள்ளார்.  டாஸ்மேனியா அருகே இருக்கும் ஹோபார்ட்டிலுள்ள பெளமாரிஸ் மிருகக்காட்சி சாலையில் சுற்றித் திரிந்த அந்த அரியவகைப் புலிதான் இந்த வீடியோவில் உள்ளது என சி.என்.என்  வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
இந்த தைலாசின் புலியின் மீது சில இடங்களில் வரிவரியாகக் கோடுகள் காணப்படுகின்றன. இது பார்ப்பதற்கு  நாய் இனத்தைப் போன்று உள்ளது. அதன் வால் பகுதி வளைக்க முடியாமல் விறைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. மனித நாகரிகத்தின் வளர்ச்சியால் இதன் இயற்கையான வாழ்விடங்கள் மறைந்ததால் இந்த இனம் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 
"அழிந்துபோன இந்தப் புலி கடைசியாக 1935 இல் படமாக்கப்பட்டுள்ளது”என்று என்எஃப்எஸ்ஏ தலைப்பில் கூறப்பட்டுள்ளது.