உலகம்

முடிவுக்கு வருமா பொருளாதார நெருக்கடி? - நிதியமைச்சர் பொறுப்பையும ஏற்றார் ரணில் விக்ரமசிங்க

Sinekadhara

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் நிதி அமைச்சர் பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், அதிபர் மாளிகையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார். 225 உறுப்பினர் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியத் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவியேற்றபின் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று அக்கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், நிதியமைச்சராகவும் ரணில் விக்கிரம சிங்க பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்துவரும் நிலையில் நிதித்துறைக்கு ரணில் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, நிதி அமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், யாரும் தீர்க்கமான முடிவை அறிவிக்காததால், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக ரணில் விக்கிரம சிங்க நிதி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதனிடையே பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை  வழங்க திட்டமிடவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.