இலங்கை அரசியயில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இலங்கை பிரதமரான ரணில் விக்ரமசிங்கே உடனான மோதலின் உச்சகட்டமாக அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக அந்நாட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச பதவியேற்றார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இதனால், ஒரே நேரத்தில் இரண்டு பிரதமரா? என்ற கேள்வி எழுந்தது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்தத் திடீர் திருப்பம், இலங்கையை தாண்டி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை அரசியலமைப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் நீடிப்பதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்ததால் அங்கு அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையில், ராஜபக்ச பிரதமர் அலுவலகத்துக்கு சென்று தனது அலுவலகப் பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்தச் சூழலில் ரணில் விக்ரமசிங்கே கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மகிந்த ராஜபக்ச கட்சிக்கு தாவினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் ரணிலுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் சிலர், தற்போதைய நிலையை காரணம் காட்டி, ரணிலை கட்சியை விட்டு நீக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த கோரிக்கைகளின் பின்னால் அதிபர் சிறிசேன இருப்பதாகவும், ரணில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் 10 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருதினங்கள் முன்பு ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரஜித சேனரத்ன, தினேஷ் வீரக்கொடி ஆகியோர் அதிபர் சிறிசேனவை சந்தித்து பேசியதாகவும் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதிபர் சிறிசேனவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து உறுதி செய்வதற்காக ரஜித சேனரத்னவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றது சட்ட விரோதமானது என்றும் அரசமைப்புக்கு விரோதமானது என்றும் ரணில் விக்ரமசிங்க கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.