rafale
rafale pt web
உலகம்

இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் கூட்டறிக்கையில் ரஃபேல் ஒப்பந்தம் இடம்பெறாதது ஏன்? - தற்போதைய நிலை என்ன?

PT WEB

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூன் 14 ல் கொண்டாடப்பட்ட பிரான்ஸ் தேசிய தினத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த பயணத்தில் பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்கவும் பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் 3 ஸ்கார்பீன் நீர் மூழ்கிகளை மும்பையில் தயாரிக்கவும் ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இப்பயணத்தின் போதே ஒப்பந்தங்கள் குறித்த முறையான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவலை உறுதி செய்து இருந்தது.

ஆனால், ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் ஒப்புதல் அளித்தும் கூட இன்னும் தொழில்நுட்ப மற்றும் வணிக அம்சங்கள் குறித்து இந்தியாவும் பிரான்சும் இன்னும் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

“இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன், ஒப்பந்தங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக அம்சங்களை இறுதி செய்ய பிரெஞ்சு நிறுவனங்கள் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் துறை உட்பட இரு தரப்பு நிறுவனங்களால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன் நாங்கள் தொழில்துறையினருடன் கலந்துரையாடி அதை இறுதி செய்ய வேண்டும்” என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்சு ஆயுதங்களை அதிகம் வாங்குபவர்களில் இந்தியாவும் ஒன்று. பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் பயணத்தின் போது 36 ரஃபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதில் வாங்கப்பட்ட விமானங்களில் சில பிரதமரின் தற்போதைய பயணத்தின் போது தேசிய தின கொண்டாட்டத்தில் போது நடத்தப்பட்ட அணிவகுப்பிலும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.