QUAD x page
உலகம்

QUAD நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் கடலோர பாதுகாப்பு கூட்டுப்பயிற்சி.. சீனா கடும் எதிர்ப்பு!

புத்தாண்டின் தொடக்கத்தில் கடலோர பாதுகாப்பு கூட்டுப்பயிற்சியை நடத்தவிருக்கிறது இந்தியாவை உள்ளடக்கிய QUAD நாடுகளின் கூட்டமைப்பு. எதிர்பார்த்தது போலேவே சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

PT WEB

சர்வதேச உறவுகளை பேணும் வகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றுடன் நம் தேசமும் இணைந்து தொடங்கிய அமைப்பு தான் QUAD. QUADRILATERAL எனும் இந்த நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பு 2007-ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த அமைப்பின் பணிகளில் இருந்து ஆஸ்திரேலியா பின்வாங்கியதால் அடுத்தாண்டே பணிகள் முடங்கின.

முடங்கிக் கிடந்த இந்த அமைப்பு 2017-ஆம் ஆண்டு புத்துயிர் பெற்றது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதை இந்த அமைப்பு நோக்கமாக கொண்டிருந்தாலும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதும் உண்டு. குவாட் அமைப்பை ஆசியாவின் நேட்டோ என சீனா தீவிரமாக எதிர்த்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் இந்த குவாட் அமைப்பின் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற்றது. அதில் குவாட் நாடுகளுக்கு இடையில் பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் முக்கியமாக இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் குவாட் நாடுகளுக்கு இடையே முதல்முறையாக கடலோர பாதுகாப்பு பயிற்சி நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

இந்த கூட்டுப் பயிற்சி 2025 ஜனவரி 7 முதல் ஜனவரி 11 வரை டோக்கியோவில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியின் இடையே ஜனவரி 10ஆம் தேதி டோக்கியோவில் ஜப்பான் மற்றும் இந்தியாவின் கடலோர காவல்படையினரின் வருடாந்திர உச்சிமாநாடும் நடைபெற உள்ளது. இதற்கிடையே குவாட் அமைப்பின் இந்த நடவடிக்கை இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கை என்று சீன ராணுவம் எச்சரிக்கை விடுக்கிறது. அமெரிக்க கடலோர காவல் படை தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட 3 புதிய கூட்டாளிகளுடன் வந்திருப்பதாகவும் சீனா விமர்சித்துள்ளது.

குவாட் அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து சீனாவை பெரிய அளவில் பகைக்க விரும்பாத ஆஸ்திரேலியா இந்த பயிற்சியில் ஒருவேளை கலந்துகொள்ளவில்லை என்றால் இது குவாட் பயிற்சி என்று அழைக்கப்படாது. சமீப நாட்களில் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது தாக்குதல், தைவானுக்கு அச்சுறுத்தல் என சீனா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. இந்த நிலையில் குவாட் நாடுகளின் கடலோர பாதுகாப்பு பயிற்சி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த நடவடிக்கைக்கு சீனா தயாராகும் என்ற சந்தேகமும் வலுக்கிறது.