FLIGHT  X VIDEO SCREENSHOT
உலகம்

அசுர வேகத்தில் வீசிய காற்று! தரையிறங்க முடியாமல் தள்ளாடிய விமானம்! விமானிகள் செய்த சாகசம்!

பலத்த காற்று காரணமாகத் தரையிறங்க முடியாமல் கத்தார் அரசுக் குடும்பத்துக்குச் சொந்தமான விமானம் காற்றின் வேகத்தில் தள்ளாடிய காட்சிகள் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளன. அப்படி என்ன நடந்தது? காற்றில் விமானம் தள்ளாடியது ஏன்? பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, கடந்த நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதையொட்டி, அவரது அதிகாரப்பூர்வக் குழுவைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே சுவிட்சர்லாந்துக்குச் சென்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 17ஆம் தேதி கத்தார் அரசின் Amiri Flight பிரிவைச் சேர்ந்த Airbus A320 ரக விமானம் ஒன்று பெர்ன் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

flight

கத்தாரின் தோஹா நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், பெர்ன் விமான நிலையத்தை நெருங்கியபோது பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. மணிக்கு சுமார் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில், விமானம் காற்றின் வேகத்தில் தள்ளாடியுள்ளது. இதனால், விமானம் ஓடுபாதையை நோக்கி நேராகச் செல்ல முடியாமல், ஒருபுறமாகச் சாய்ந்த நிலையில் இயக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையில் இதுபோன்ற தரையிறக்கத்தை Crab Approach என்று அழைக்கிறார்கள். அதாவது, பலத்த பக்கவாட்டுக் காற்று விமானத்தைத் தள்ளும்போது, அதன் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில் விமானிகள் விமானத்தை ஓடுபாதைக்கு நேராக இல்லாமல் ஒரு கோணத்தில் செலுத்துவார்கள். பின்னர், தரையிறங்குவதற்குச் சற்று முன்பாக விமானத்தின் திசையை ஓடுபாதைக்கு நேராகச் சரிசெய்து பாதுகாப்பாகத் தரையிறக்குவார்கள். இதே உத்தியைத்தான் கத்தார் விமானத்தின் விமானிகளும் கையாண்டுள்ளனர். கடைசி நொடியில் விமானத்தின் திசையைச் சரிசெய்து, ஓடுபாதையில் பாதுகாப்பாகத் தரையிறக்கியுள்ளனர். இந்தக் காட்சிகளை விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

flight

இதற்கிடையே, இந்த விமானத்தில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி பயணிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. கத்தார் அரசின் அதிகாரப்பூர்வக் குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். நல்வாய்ப்பாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.