உலகம்

100 பயணிகளுடன் டெல்லியிலிருந்து தோஹா சென்ற விமானம்: பாகிஸ்தானுக்கு திசை திருப்பட்டது ஏன்?

EllusamyKarthik

இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு ‘QR579’ என்ற விமானம் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸூக்கு சொந்தமான இந்த விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு திசை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியிலிருந்து 100 பயணிகளுடன் அதிகாலை 3.50 மணி அளவில் புறப்பட்ட இந்த விமானம் காலை 5.30 மணி அளவில் கராச்சி சென்றுள்ளது. இது தொடர்பாக அரசின் உதவி கோரி ட்விட்டரில் ஒரு நபர் பதிவு செய்துள்ளார். அநேகமாக அவர் அந்த விமானத்தில் பயணித்த பயணியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

“கராச்சிக்கு டைவர்ட் செய்யப்பட்ட டெல்லி டூ தோஹா விமானத்தின் நிலை என்ன. இங்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. உணவு மற்றும் தண்ணீர் கூட பயணிகளுக்கு வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர் சேவை வசதியை கூட அணுக முடியவில்லை. உதவுங்கள்” என சொல்லி அந்த நபர் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் அத்துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் டேக் செய்துள்ளார். 

சரக்குகளை வைத்துள்ள பகுதியில் புகை அறிகுறி இருந்த காரணத்தால் விமானம் தரையிறக்கப் பட்டுள்ளதாகவும். மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் தோஹா செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.