பிவி சிந்து Pt web
உலகம்

"ஒருமணி நேரத்திற்கு மேலாக குண்டுவீச்சு"- துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ள பி.வி.சிந்து பதிவு!

துபாய் விமான நிலையத்திற்கு அருகிலேயே ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும் தொடர் தாக்குதல்களால் அசாதாரண, பதற்றமான சூழல் நிலவுகிறது வருவதாகவும் துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ள பி.வி.சிந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Premkumar S

இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுத் தாக்குதலில் ஈரான் உட்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில், போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அந்த வகையில் மறுஅறிவிப்பு வரும் வரை துபாய் விமான நிலையமும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகள் வழியாக இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

ஈரான் மீது சேர்ந்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

இதற்கிடையில், பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக துபாய் விமான நிலையம் சென்ற லட்சக்கணக்கான பயணிகள் விமானங்கள் ரத்தால் தவித்துவருகின்றன. அந்த வகையில் தான், இங்கிலாந்தில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன் தொடரில் பங்கேற்க பர்மிங்காம் செல்வதற்காக துபாய் விமான நிலையம் சென்ற இந்திய பேட்மிட்டன் வீராங்கணை பி.வி சிந்து போர் சூழல் காரணமாக அந்த விமான நிலையத்திலேயே சிக்கித் தவித்து வருகிறார். மார்ச் 3 தேதி தொடங்கவுள்ள பேட்மிட்டன் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், ஈரானில் நடைபெற்று போர் தாக்குதல் குறித்து பிவி சிந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”இங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். தலைக்கு மேல் தொடர்ந்து ஒலி எச்சரிக்கைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. சில மணி நேரங்களுக்கு முன்பு, நாங்கள் விமான நிலையத்தில் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. புகையும் சிதறிய கழிவுகளும் பரவியிருந்ததால், அதற்கு மிக அருகில் இருந்த என் பயிற்சியாளர் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிச் செல்ல வேண்டியிருந்தது. அது எங்களுக்கெல்லாம் மிகுந்த பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திய தருணமாக இருந்தது.

பிவி சிந்து

தற்போது, நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். துபாய் விமான நிலைய பணியாளர்கள் மற்றும் துபாய் அதிகாரிகள் ஓய்வின்றி செய்த முயற்சிகளின் காரணமாக, எங்களை மேலும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியுள்ளனர். எங்களை பாதுகாப்பாக வைத்திருக்க தொடர்ந்து உதவி செய்து வரும் துபாயிலுள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிக்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். இப்போது, சூழ்நிலை சீராகும் வரை ஓய்வெடுத்து, நல்லதொரு முடிவை நம்பிக்கையுடன் காத்திருக்க முயற்சி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.