E.இந்து
2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது திடீர் தாக்குதலை ஆரம்பித்தது. இதன் காரணமாக, ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த போர் ஒரு முடிவை அடையவேண்டும் என்று பல்வேறு நாடுகள் முற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்ற வார இறுதியில் ஒரே இரவில் ரஷ்யா, 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதுவரை ரஷ்யா நடத்திய தாக்குதல்களிலேயே இந்த வான்வழித் தாக்குதல் மிகப்பெரியது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த வான்வழித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட இதுவரை சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனின் கீவ், கார்கிங், மைக்கோலைவ், டெர்னோபில், கிமெல்னிட்ஸ்கி போன்ற இடங்களில் இந்த வான்வழித் தாக்குதல் நடைபெற்றது.
ரஷ்யாவின் 267 ட்ரோன்களையும், 45 ஏவுகணைகளையும் உக்ரைன் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இருந்தபோதிலும் உக்ரைனுக்கு இதனால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
கீவ் பகுதியை பொறுத்தவரை பலர் காயமடைந்துள்ளனர். கிமெல்னிட்ஸ்கி பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த தாக்குதல் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மெளனத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்திருந்தார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி பேசியதாவது, ”அமெரிக்காவின் மெளனமும், உலகின் பிற நாடுகளின் மெளனமும் மட்டுமே புதினை ஊக்குவிக்கிறது.
ரஷ்யாவின் இதுபோன்ற ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்களுக்கான போதுமான காரணங்கள் ஆகும். ரஷ்யாவிற்கு எதிராக வலுவான தடைகள் வேண்டும்” என்றுக் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் உள்ள விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. அவர் அதிக உயிர்களை இதுவரை கொன்றுள்ளார். அவரது செயல்கள் எதுவும் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.