உலகம்

"எங்கள் திட்டப்படி எல்லாம் நடக்கிறது”- அதிபர் புடின் பேச்சு

"எங்கள் திட்டப்படி எல்லாம் நடக்கிறது”- அதிபர் புடின் பேச்சு

நிவேதா ஜெகராஜா

“போரை முடிவுக்கு கொண்டு வர நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும்” என ரஷ்ய அதிபர் புடினுக்கு, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரம், “மேற்குலக நாடுகள் உருவாக்கிய ரஷ்ய எதிர்ப்பு நாடு விரைவில் அழிக்கப்படும்” என்று புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையே நாளுக்கு நாள் போர் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனின் தெற்கு பகுதி மட்டுமின்றி, கெர்சான் நகரத்தையும் ரஷ்ய படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. உக்ரைன் வசம் இருக்கும் தலைநகர் கீவ்வை பிடிக்க, ரஷ்ய படைகள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போர் காரணமாக இதுவரை உக்ரைனில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தச் சூழலில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்க, ரஷ்ய அதிபர் புடின் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இருவரும் பிரச்னைக்கு தீர்வுக் காண நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே பேரழிவு ஏற்படுவதை தவிர்க்க முடியும். புடின் பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராவிட்டால், போர் புரிய மேற்கத்திய நாடுகள் போர் விமானங்களை எங்களுக்கு வழங்க முன் வரவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் தங்கள் தரப்பிலான சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அதன்படி, “எந்த திட்டமும் இல்லாமல் இந்த போர் நடத்தப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கூறிய கருத்தை ஏற்க முடியாது. ரஷ்யா, திட்டமிட்டபடியே உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. விரைவில் மேற்குலக நாடுகள் உருவாக்கிய ரஷ்ய எதிர்ப்பு உக்ரைனில் இருந்து அழிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார். புடினின் இக்கருத்துகளால், உக்ரைன் மீதான படையெடுப்பு அடுத்து வரும் நாட்களில் மேலும் தீவிரம் அடையலாம் என அஞ்சப்படுகிறது.