மொஜ்தபா காமேனி, புடின் Pt web
உலகம்

இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல் | ”ஈரானுக்கு முழு ஆதரவு..” - ரஷ்ய அதிபர் புடின் உறுதி.!

ஈரானின் புதிய உச்சத்தலைவராக பதவியேற்றுள்ள மொஜ்தபா காமேனிக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஈரானிய மக்களை ஒன்றிணைக்கவும் மொஜ்தபா காமேனியால் முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Premkumar S

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பிறகு, ஈரானின் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா காமேனி நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புடின், ஈரானுக்கு முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மொஜ்தபா, தனது தந்தையின் கொள்கைகளை முன்னெடுத்து, ஈரானிய மக்களை ஒன்றிணைக்க முடியும் என நம்பப்படுகிறது.

ஈரானின் உச்சத்தலைவராக 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டுத்தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தசூழலில் காமேனியின் மறைவுக்குப் பிறகு, அந்நாட்டின் மூத்த மதத்தலைவர் அலிரேசா அராபி ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

அயதுல்லா அலி காமேனி

இந்நிலையில், நேற்று (மார்ச் 8) ஈரானின் புதிய உச்சத்தலைவராக அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு ஆசியாவில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், மொஜ்தபா உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 1980களில் நடந்த ஈரான்-ஈராக் போரில்நேரடியாகப் பங்கேற்ற இவர், புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நீண்டகாலமாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளார். 2009ஆம் ஆண்டு ஈரானியப் போராட்டங்களை ஒடுக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். எனவே, போர்த்தன்மை மிகத் தீவிரமடையும் எனப் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் தான், ஈரானின் உச்சத்தலைவராக பதவியேற்றுள்ள மொஜ்தபா காமேனிக்கு வாழ்த்து தெரிவித்து ரஷ்ய அதிபர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஈரானின் புதிய தலைமைக்கு ரஷ்யா தனது முழு ஆதரவை வெளிப்படுத்துவதாகவும், ஈரான் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ரஷ்யா என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புடின்

மேலும், அக்கடிதத்தில், ”தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும், ஈரானிய மக்களை ஒன்றிணைக்கவும் மொஜ்தபா காமேனியால் முடியும். தனது தந்தை அயதுல்லா அலி காமேனியின் பாரம்பரியத்தையும் கொள்கைகளையும் மொஜ்தபா காமேனி வெற்றிகரமாக முன்னோக்கி எடுத்துச் செல்வார். புதிய பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றவும், நாட்டை வழிநடத்தவும் அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் போர் நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதாக தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யா ஈரானுக்கு ஆதரவளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது