Putin's monkey lab  AI
உலகம்

நீண்ட ஆயுள்.. குரங்கு ரத்தம் மூலம் இளமையை மீட்கும் புதினின் அதிரடி முயற்சி!

குரங்கு ரத்தத்தில் ஒளிந்திருக்கிறதா நீண்ட ஆயுள் ரகசியம்? புதினின் வினோத ஆராய்ச்சி

PT WEB

குரங்கு ரத்தத்தின் மூலம் இளமையை மீட்கும் முயற்சியில் புதினின் அதிரடி திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞான உலகில் இது புதிய சவாலாக மாறியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 150 ஆண்டுகள் வரை வாழ முடியுமா? மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் குரங்குகளின் ரத்தத்தை வைத்து ஆய்வு செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ரஷ்யாவில் புதினுக்கு நெருக்கமான விஞ்ஞானி மிகைல் கோவல்சுக் தலைமையில் இந்த ஆய்வு முன்னெடுத்து நடத்தபடுவதாக சொல்லப்படுகிறது. இதற்காக குரங்குகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும் சிறப்பு ரத்த வங்கியும் தொடங்கப்பட்டுள்ளது. கெர்சடோவ் நிறுவனம் மற்றும் பெட்ரோவ்ஸ்கி ரஷ்ய அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மையம் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Putin

இந்த ஆய்வுக்காக 22 வகைகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, 18 வயது முதல் 30 வயதுக்கு மேற்பட்ட வயதான குரங்குகளின் ரத்தம், மூளை, ரத்த நாளங்கள் மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் முதுமைக்கான காரணங்களையும், மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பதற்கான வழிகளையும் கண்டறிய முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தபோது, மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ்வது குறித்தும், உடல் உறுப்புகளை மாற்றுவதன் மூலம் நீண்ட காலம் வாழ்வது குறித்தும் புதின் பேசியது மைக் மூலம் பதிவானது. இதையடுத்து அவரது நீண்ட ஆயுள் ஆர்வம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Putin

இதற்கிடையே, முதுமையைத் தடுக்க சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தையும் ரஷ்யா முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மரபணு சிகிச்சை, ஆய்வகத்தில் மனித உறுப்புகளை உருவாக்குதல், பன்றிகளின் உடலில் மனிதர்களுக்குப் பொருந்தக்கூடிய உறுப்புகளை வளர்த்து மாற்று அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பங்கள் மனிதர்களின் ஆயுளை உண்மையிலேயே அதிகரிக்கும் என்பதற்கு இதுவரை போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.