புதியதலைமுறையின் இன்றைய உலக செய்திகள் pt
உலகம்

PT World | விநாயகர் சிலை குறித்து AI-இடம் கேள்வி முதல் சைனாவில் பறக்கும் கார்கள் உற்பத்தி வரை!

இன்றைய PT World Digest பகுதியில் ரஷ்யாவில் பிரம்மாண்ட குடிநீர் குழாய் வெடிப்பு முதல் இஸ்ரேல் பிரதமருக்காக ட்ரம்ப் எழுதிய கடிதம் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

ரஷ்யா: பிரம்மாண்ட குடிநீர் குழாய் வெடிப்பு

ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள பிரம்மாண்டமான குடிநீர் குழாய் வெடித்ததில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்கட்டமைப்பு தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது.

இந்நிலையில், நோவோசிபிர்ஸ்க்கில் உள்ள பிரம்மாண்ட குடிநீர் குழாய் வெடித்ததில், நகரின் ஒரு பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளுக்கான குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நெட்ஃபிளிக்ஸ் மையம் திறப்பு

netflix

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், தனது முதல்பொழுதுபோக்கு மையத்தை திறந்துள்ளது. ஃபிலடெல்ஃபியா (PHILADELPHIA) நகரில் உள்ள கிங் ஆஃப்பிரஷியா (King of Prussia) மாலில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், Squid Game, Emily in Paris போன்ற பிரபலநெட்ஃபிக்ஸ் தொடர்களை கருப்பொருளைக் கொண்ட விளையாட்டுகள், உணவகம் மற்றும் ஷாப்பிங் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. டெக்சாஸ் மாகாணம் டாலாஸில் டிசம்பரிலும், நெவாடா மாகாணம் லாஸ்வேகாஸில் 2027ஆம் ஆண்டிலும் இதுபோன்ற மையங்கள் திறக்கப்படஉள்ளன.

விநாயகர் சிலை குறித்து ஏ.ஐ.யிடம் கேள்வி கேட்ட மஸ்க்!

elon musk

விநாயகர் சிலை குறித்து டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், கிரோக் ஏ.ஐ.-யிடம் கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. விநாயகரின் படத்தை குறிப்பிட்டு, இது என்ன என்று கிரோக் ஏ.ஐ.-யிடம் எலான் மஸ்க் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஏ.ஐ., விநாயகர் சிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக வழங்கியுள்ளது. குறிப்பாக விநாயகர் சிலையின் வடிவமைப்பு மற்றும் அதன் பாரம்பரிய அம்சங்களை மிகத் துல்லியமாகவும், எளிமையாகவும் வழங்கியதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கூகுள் ஜெமினியால் பயனர்கள் கண்காணிப்பு?

ஜெமினி

கூகுள் ஜெமினி ஏஐ மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்தொடர்புகள் கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பயனர்களின் மின்னஞ்சல்கள், சேட்டிங் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த செயல் கூகுள் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் பயனரின் எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகக்கோப்பை விளையாடுவது குறித்து மெஸ்ஸி, ரொனால்டோ கருத்து

அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவது குறித்து இருபெரும் வீரர்களான ரொனால்டோவும் மெஸ்ஸியும் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த உலகக்கோப்பையில் நிச்சயம் என ரொனால்டோ கூறியிருக்கும் நிலையில், அணிக்கு சுமையாக இருக்கவிரும்பவில்லை, உடல் தகுதியை பொறுத்து முடிவுசெய்வேன் என மெஸ்ஸி கூறியுள்ளார்..இருவர்களது கருத்துகள் சர்வதேச கால்பந்து ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளன.

துபாயில் சாலைப் பள்ளம் மின்னல் வேகத்தில் சீரமைப்பு!

துபாயில் வசிக்கும் ஒரு இந்தியரின் நண்பர் சாலையில் இருந்த பள்ளம் குறித்து புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே பள்ளம் சீரமைக்கப்பட்டது குறித்து அந்த இந்தியர் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். நாக்பால் என்ற அந்த இந்தியர் வெளியிட்ட வீடியோவில், பணியாளர்கள் சாலையைச் சுத்தம் செய்து, சமன் செய்து, மீண்டும் சாலை அமைக்கும் பணியை மின்னல் வேகத்தில் முடிப்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, துபாயின் நிர்வாகத் திறமை மற்றும் வேகமான செயல்பாடு குறித்துப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சீனாவில் பறக்கும் கார் உற்பத்தி தொடங்கியது

சீனாவில் பறக்கும் கார்

உலகிலேயே முதன்முறையாக சீனாவில் பறக்கும் கார்கள் உற்பத்தி சோதனைரீதியில் தொடங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பறக்கும் காரையும் 30நிமிடத்திற்குள் செய்ய முடியும் என்றும்ஆண்டுக்கு 10 ஆயிரம் கார்களைஉற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பறக்கும் கார் 5.5 மீட்டர் நீளம்கொண்டதாகவும் இருந்த இடத்தில்இருந்தே மேல் எழும்பி தரையிறங்கும்வகையில் இருக்கும் என்றும்கூறப்பட்டுள்ளது. 6 சக்கரங்கள் கொண்டஇந்த காரை இதை தேவைப்படும்போதுசாலையில் ஓடும் வகையிலும்மாற்றிக்கொள்ளலாம். வாகன உலகில்பறக்கும் கார்கள் பெரும் புரட்சிபடைக்கும் என இதை தயாரிக்கும்எக்ஸ்பெங் நிறுவனம் தெரிவித்துள்ளது..

ஜப்பானில் பார்வையாளர்களை உள்ளிழுக்கும் கண்காட்சி

ஜப்பானின் க்யோட்டோ நகரில் பார்வையாளர்களை உள்ளிழுக்கும் கலைக் கண்காட்சி ஒன்று உலகெங்கிலும் கலை ஆர்வலர்களை ஈர்த்துவருகிறது. பயோவோர்ட்டெக்ஸ் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கண்காட்சி பார்வையாளர்களுக்கும் கலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. பார்வையாளர்களால் கலைப் பொருளை ஊடுருவிச் செல்ல முடியும். கலைப் பொருட்களும் பார்வையாளர்களுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. இந்தக் கண்காட்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் கண்டுகளிக்கின்றனர்.

மெய்சிலிர்க்க வைத்த இந்திய வான்படை வீரர்கள்

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் முப்படைகளின் கூட்டுப் பயிற்சியில், வான்படை வீரர்களின் சாகசங்கள் சிலிர்க்க வைக்கின்றன. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் திரிசூல் என்ற பெயரில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தென் பிராந்திய படைப்பிரிவினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் (Exercise Maru Jwala) மரு ஜுவாலா என்ற குறிப்பிட்டதொரு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வான்படை வீரர்கள், விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் வானில் பறந்து, தரையில் ஏற்கனவே நிர்ணயித்த இலக்கில், வந்து சேர்ந்தனர்.

இரவு வெளிச்சம்: இதயத்துக்கு நல்ல

Mobile Apps

இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்தில் இருப்பது இதய செயலிழப்பு அபாயத்தை 56% வரை உயர்த்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு முக்கிய ஆய்வில், அதிக வெளிச்சம் உடலின் இயற்கையான செயல்பாட்டை சீர்குலைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்வதாக தெரியவந்துள்ளது. இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, படுக்கை அறையில் வெளிச்சத்தைக் குறைத்து, படுக்கைக்கு முன் மொபைல் திரைகளைப் பார்ப்பதை தவிர்க்குமாறு ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாக்., அழைப்பு

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல்

ஆப்கானிஸ்தான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கதவுகள் திறந்தே இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான்-பாகிஸ்தான் போன்ற குழுக்களுக்கு எதிராக தலிபான் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பிராந்தியத்தில் அமைதி திரும்பும் என்று அவர்தெரிவித்துள்ளார். இதற்கு முன்,இருதரப்புக்கும் இடையே துருக்கியில்நடந்த இரண்டுகட்ட அமைதிப்பேச்சுவார்த்தைகள், எந்த உடன்பாடும்எட்டப்படாமல் முடிவடைந்ததுகுறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி உருவாகும் சூழல்

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 27-வது அரசமைப்புத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தத்தின் மூலம் அணுசக்தி அதிகாரம், நீதித்துறை உள்ளிட்டவற்றில் ராணுவத் தளபதி அசீம் முனீரின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நான்காவது ராணுவ ஆட்சி என்று அழைக்கப்படும் இந்தச் சூழலுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தியாவும் இச்சூழலை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் அதிபருக்கு ட்ரம்ப் கடிதம்

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரி அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் கடினமான காலங்களில் சிறப்புற பணியாற்றிய நெதன்யாகு, பிணைக்கைதிகளை மீட்டு வந்தது, ஹமாஸை கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நேரத்தில் நெதன்யாகு மீதான அரசியல் ரீதியான வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்கவேண்டும் என்றும் அவர்கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரு: பேருந்து விபத்தில் 37 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்தனர். அரேகியூபா (Arequipa) பிராந்தியத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 37 பேர் உயிரிழந்த நிலையில் 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.