சீனா, வியட்நாம் எக்ஸ் தளம்
உலகம்

PT World Digest | வியட்நாமை புரட்டிப்போட்ட புயல் To 9 மணி நேரத்தில் கட்டப்பட்ட ரயில் நிலையம்!

இன்றைய PT World Digest பகுதியில் வியட்நாமை புரட்டிப்போட்ட புயல் டூ 9 மணி நேரத்தில் கட்டப்பட்ட ரயில் நிலையம் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

இன்றைய PT World Digest பகுதியில் வியட்நாமை புரட்டிப்போட்ட புயல் டூ 9 மணி நேரத்தில் கட்டப்பட்ட ரயில் நிலையம் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

1. மியான்மரில் இருந்து 270 இந்தியர்கள் மீட்பு

மியான்மர் நாட்டில் சைபர் மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர். மியான்மரின் மியாவாட்டி பகுதியில் செயல்பட்டு வந்த சைபர் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த, 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

மியான்மர்

இதில் இந்தியர்கள் 450க்கும் மேற்பட்டோர் இருந்தநிலையில், முதற்கட்டமாக 270 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்தியர்களை மீட்கும் பணிகளில் ராணுவ விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2.ஆளுநர், மேயர் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு பின்னடைவு

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வாகி ஓராண்டு ஆகும் நிலையில், ஆளுநர் மற்றும் மேயர் தேர்தல்கள் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளன. ட்ரம்ப்பை கடுமையாக எதிர்ப்பவரான ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

ட்ரம்ப்

வர்ஜினியா மற்றும் நியூஜெர்ஸி மாகாண ஆளுநர் தேர்தல்களில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சிலவற்றிலும் ட்ரம்ப் கட்சி தோற்றுள்ளது. மேலும் சிறுபான்மையினர், பெண்களிடம் குடயிரசுக் கட்சி வேட்பாளர்கள் தோற்றுள்ளதும் அமெரிக்க அரசியல் பாதை மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

3.வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா மம்தானி

நியூயார்க் மேயராக தேர்வாகியுள்ள ஜோஹ்ரான் மம்தானி, அவர் அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. இலவசப் பேருந்து பயணம், இலவச குழந்தை பராமரிப்பு உள்ளிட்டவாக்குறுதிகளை அளித்தே, மம்தானி வெற்றி பெற்றார். இதில் பேருந்து பயணத்தை இலவசமாக்கினால், ஆண்டுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.

Zohran Mamdani

வீட்டு வாடகை உயர்வை நிறுத்தும் அவரது வாக்குறுதியை நிறைவேற்றினால், அது வீட்டு உரிமையாளர்களை பாதிக்கும் என கருதப்படுகிறது. அதேபோல், இலவச குழந்தை பராமரிப்புக்கு ஆண்டுதோறும், 6 பில்லியன் டாலர் செலவாகும் எனவும் கருதப்படுகிறது. ஆனால், நியூயார்க் நகரமே நிதி நெருக்கடியால் தவிக்கும் நிலையில், இந்த வாக்குறுதிகளை மம்தானியால் நிறைவேற்ற முடியுமாஎன கேள்வி எழுந்துள்ளது.

4.நியூயார்க்கின் முதல் ஜென் சி பெண்மணி ரமா துவாஜி

நியூயார்க் நகரின் முதல் பெண்மணியான முதல் ஜென் சி நபர் என்ற பெருமையை ரமா துவாஜி பெறுகிறார். இவருக்கு வயது 28 என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவைப் பூர்விகமாக கொண்டது ரமாவின் குடும்பம். இவர் அமெரிக்காவில் பிறந்தாலும் பின்னர் துபாயில் வளர்ந்து மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பியுள்ளார்.

ரமா துவாஜி

ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக போராடும் ரமா துவாஜி, எளிமையான வாழ்க்கையிலும் விருப்பம்கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

5.வியட்நாமை புரட்டிப்போட்ட கல்மேகி புயல்

பிலிப்பைன்ஸில் கடும் சேதத்தை ஏற்படுத்திய கல்மேகி புயல், வியட்நாமில் கரையை கடந்தது. வியட்நாமின் மத்திய கடற்கரைப் பகுதியை புயல் கடந்தபோது மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடற்கரைகளில் 10 மீட்டர் வரை அலைகள் எழுந்தன. குவாங் நை மாகாணத்தில் அலைகளில் சிக்கி மூன்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் காணமல் போன நிலையில், டக் லக் மாகாணத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

vietnam kalmaegi attack

மழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வீடுகள் மற்றும் கடைகளை வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் புயல் காரணமாக நாட்டில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 2 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தஆண்டு வியட்நாமை தாக்கும் 13ஆவது புயல் கல்மேகி ஆகும்.

6. 9 மணி நேரத்தில் கட்டப்பட்ட ரயில் நிலையம்

சீனர்களின் விரைவான கட்டுமானப் பணிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது சீனாவின் லாங்யான் ரயில்வே நிலையம். 2019ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் வெறும் 9 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

1,500 பணியாளர்களை கொண்டு மிகக் குறுகிய நேரத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தில் தற்போது வரை ஒரு விபத்துகூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் பெற்ற பூனை

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் பெற்று பூனை ஒன்று கின்னஸ் சாதனைபடைத்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை பூர்விகமாக கொண்ட நாலா என்ற பூனையை, இன்ஸ்டாகிராமில் தற்போதைய நிலவரப்படி 4.4 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர்.

cat

உலகின் பணக்கார பூனை என அறியப்படும் இதன் நிகர சொத்து மதிப்பு 100மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இவை இந்த பூனையின் ஆன்லைன் விளம்பரங்கள், வணிகரீதியிலானபங்குகள் மூலம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

8. அமெரிக்கா, ரஷ்யா இடையே அதிகரிக்கும் அணுஆயுத போட்டி

அமெரிக்காவும் ரஷ்யாவும் மாறிமாறி நாசகார ஆயுத சோதனைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மீண்டும் போர் அச்சம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, மினிட்மேன் 3 என்ற பெயரிலான சக்திவாய்ந்த ஏவுகணையை மார்ஷல் தீவு பகுதியிலிருந்து சோதித்துள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அணுகுண்டை தாங்கிச் சென்று பேரழிவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாகும்.

usa

மணிக்கு 23 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பறக்கும் திறன்கொண்டது இந்த ஏவுகணை.அணுஆயுத சோதனைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கும் என ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், இச்சோதனை நடைபெற்றுள்ளது. இதற்கிடையே அணுகுண்டு சோதனைக்கு தயாராக இருக்குமாறு தங்கள் பாதுகாப்புத் துறைக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆணையிட்டுள்ளார்.

9. துருக்கியில் பல்லாயிரம் கோடி தங்கப் படிமங்கள்

துருக்கியின் முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமான எர்டெமிரின் என்ற நிறுவனம், சுமார் 12 டன் தங்க இருப்பை கண்டறிந்துள்ளது. அங்குள்ள சிவாஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ள தங்க இருப்பின் மதிப்பு, இந்திய மதிப்பில் 15 ஆயிரத்து 63 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

துருக்கி

இதில் 14 மில்லியன் டன் தாதுக்கள் இருக்கக்கூடும் என்பதால் ஆய்வுப் பணிகள் தொடர்கின்றன.