Saudi Arabia, Tom Cruise pt web
உலகம்

PT World Digest | சவுதியில் பயங்கர விபத்து: 45 இந்தியர்கள் பலி முதல் டாம் குரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் வரை

இன்றைய PT World Digest பகுதியில் சவுதியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 45 இந்தியர்கள் பலி முதல் டாம் குரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் வழங்கப்பட்டது வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

இந்தியா, சீனாவுக்கு 500% வரி: அமெரிக்காவில் மசோதா

டொனால்ட் ட்ரம்ப்

தடைகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க வழி செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியரசுக்கட்சி உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் கொண்டு வந்த மசோதாவை அதிபர் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். அமெரிக்க அரசின் இம்முடிவால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர் நெருக்கடி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவிடம் இருந்து எல்பிஜி வாங்கும் இந்தியா

lpg

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஓராண்டுக்கு 22 லட்சம் டன் எரிவாயுவை அடுத்தாண்டு இறக்குமதி செய்யும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு எரிவாயு இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இந்தியா தனது எல்பிஜி எரிவாயு இறக்குமதியில் 10 சதவீதத்தை அமெரிக்காவிடமிருந்து வாங்க உள்ளது. ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கவேண்டாம் என இந்தியாவுக்கு அமெரிக்கா ஏற்கெனவே நெருக்கடி அளித்து வரும் இந்த ஒப்பந்தம் கவனம் பெறுகிறது.

பிரிட்டனில் அகதிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Refugees

பிரிட்டனில் தஞ்சம் புகும் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை அறிவித்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் இனி தங்கள் நாடு அகதிகளின் சொர்க்கபுரியாக இருக்காது எனக் குறிப்பிட்டார். அதே நேரம் அரசின் இம்முடிவை கண்டித்திருக்கும் அகதிகளுக்கான சங்கம் இதனால் எதிர்மறை விளைவுகளே ஏற்படும் என எச்சரித்துள்ளது. பிரிட்டனில் அதிகளாக குடியேறுபவர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. இதையடுத்து சலுகைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் புகுவது குறிப்பிடத்தக்கது.

காங்கோவில் அமைச்சர் சென்ற விமானம் விபத்து

Congo: Minister’s Aircraft Crashes

காங்கோவில், சுரங்கத்துறை அமைச்சர் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். காங்கோ ஜனநாயகக் குடியரசின் லுவாலாபா மாவட்டத் தலைநகரான கோல்வேசி விமான நிலையத்தில், இந்த விபத்து நடந்துள்ளது. விமானம் தரையிறங்கும் போது விபத்து நிகழ்ந்ததால், அதில் பயணித்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். அதேநேரம், விமான விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

சவுதியில் பயங்கர விபத்து: 45 இந்தியர்கள் பலி

Saudi Arabia

சவுதி அரேபியாவில் மெக்கா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். தெலங்கானாவிலிருந்து மெக்கா புனிதப்பயணம் மேற்கொண்ட குழுவினர் ஒரு பேருந்தில் மதினாவிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முஃபிர்ஹத் என்ற இடத்தில் டீசல் டேங்கர் லாரியுடன் மோதியதில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இவ்விபத்தில் 45 பேர் இறந்துள்ளனர். இதில் 28 பேர் பெண்கள். காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்விபத்தில் 45 பேர் இறந்ததாகவும் ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெறுவதாகவும் ஹைதராபாத் காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா விபத்து: அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

Minister Jaishankar

சவுதி அரேபியாவில் சாலை விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில் இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விபத்தில் இறந்தவர்கள் உடலை மீட்டு வருவது, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதற்கிடையே ஜெட்டாவில் உள்ள தூதரகத்தில் விபத்து குறித்த விவரங்களை வழங்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தென் சீனக் கடலில் சீனா ரோந்து நடவடிக்கை

China Patrols in the South China Sea

தென் சீனக் கடலில் சீனா தனது குண்டுவீச்சு பாணியிலான ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவுடனும் ஜப்பானுடனும் இணைந்து ஃபிலிப்பைன்ஸ் கடற்படை ரோந்துப் பயிற்சியை மேற்கொண்டது. இதை அடுத்து சீனாவும் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே தென் சீனப் பகுதி தொடர்பாக சீனாவுக்கும் ஃபிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் சீனாவின் ரோந்து நடவடிக்கை ஃபிலிப்பைன்ஸுக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

டாம் குரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது

Tom Cruise

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற ஆஸ்கர் கவர்னர்ஸ் விருதுகள் விழாவில் டாம் குரூஸ் உட்பட பலருக்கும் கௌரவ ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கர் விருதுகளில் இதுவரை 4 முறை பரிந்துரைக்கப்பட்ட டாம் குரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்புரையின்போது “நான் செய்வதல்ல சினிமா, சினிமாதான் நான்” என்று டாம் குரூஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவருக்கு ஆஸ்கரை வழங்கிய இயக்குநர் அலெஹாண்ட்ரோ இன்னாரிட்டு “இந்த ஆஸ்கர், டாம் குரூஸின் இறுதி ஆஸ்கராக இருக்காது” என்றார்.

அமெரிக்காவுக்கு பெண் அதிபர்?: மிச்செல் வேதனை

Michelle

பெண் ஒருவரை நாட்டின் அதிபராக தேர்வு செய்வதற்கு அமெரிக்கா தயாராக இல்லை என, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், பெண்களை அதிபராக ஏற்றுக்கொள்ள யாரும் இங்கு தயாராக இல்லை என்றும் தெரிவித்தார். பெண் ஒருவரால் வழிநடத்தப்படுவதை இன்னும் பல ஆண்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்றும் மிச்செல் வேதனையுடன் கூறினார்.