கம்யூனிஸ வெறியர் என்று நியூயார்க் மேயர் மம்தானியை அழைத்த ட்ரம்ப், இன்று அவரை ஒரு பகுத்தறிவாளர் என்று அழைத்திருப்பது சர்வதேச அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்தபோது பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறின. அப்போது, நியூயார்க் நகரத்திற்கான நிதிகளை விடுவிக்கமாட்டேன் என ட்ரம்ப் முன்பு கூறியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், மம்தானியை காயப்படுத்த மாட்டேன் எனவும், அவருக்கு உதவிகரமாக இருப்பேன் எனவும் பதிலளித்தார். மம்தானி சிறப்பாக செயல்பட்டால் தமக்கு மகிழ்ச்சிதான் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். முன்பு மம்தானி மீது மதரீதியிலான விமர்சனங்களையும் வைத்திருந்த ட்ரம்ப், தற்போது அதனை மாற்றிக்கொண்டு மம்தானி ஒரு சிறந்த பகுத்தறிவாளர் என்றும் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் மனமாற்றத்தைக் கண்டு வியப்படைந்த மம்தானி, நியூயார்க் முன்னேற்றத்திற்காக ஒன்றுசேர்ந்து உழைப்போம் என்றும் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கரனும், அவரது காதலி இசபெல்லாவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம் கரண் மோதிரம் அணிவிக்கும் புகைப்படங்களை அவரது காதலி இசபெல்லா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வந்த சாம் கரன், இனி ராஜஸ்தான் அணிக்காக விளையாடவுள்ளார்.
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 2022-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற அவர் சதி செய்த குற்றத்திற்காக, பிரேசில் உச்ச நீதிமன்றம் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதில் மூன்று மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்காவலில் இருந்த போல்சனாரோ, சனிக்கிழமை மாலை சிறையில் அடைக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் ஆர்க்டிக் குளிர்காற்று ஊடுருவியதால், பல பகுதிகளில் பனிப்புயல் மற்றும் கடும் குளிர் நிலைமை உருவாகியுள்ளது. லண்டன், தெற்கு இங்கிலாந்து, கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் பனித்துளி கலந்த மழை பதிவாகி, பயணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, கிராமப்புறங்களில் சாலைகள் மூடப்பட்டதால், மக்கள் சில பகுதிகளில் தனிமைப்படும் அபாயம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன; பல விமான நேரங்களும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் பனிப்புயல் அதிகரித்து, பள்ளிகள் மற்றும் பேருந்து சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தாய்லாந்தின் ஹட் யய் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் குளம் போல மாறியிருக்கின்றன. இடுப்பளவு தண்ணீரில் மக்கள் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை உருவாகியுள்ளது. பலர் தங்களது குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயணித்து வருகின்றனர்.
உடல் பருமன் உலகெங்கும் மக்களின் முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. அதே நேரம் எடைக்குறைப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது அமோக லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளது. உடல் பருமன் குறைப்பு மருந்துகளுக்கான சந்தை உலகெங்கும் வேகமாக உயர்ந்து வருகிறது. இவ்வகை மருந்துகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள லில்லி நிறுவனம் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து நிறுவனமாக மாறியுள்ளது. ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில் நிறுவனங்கள் பட்டியலில் இணைந்த முதல் மருந்து நிறுவனம் என்ற பெருமையை லில்லி பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் சமநிலை வளர்ச்சி பெற தேவையான நான்கு முக்கிய முன்மொழிவுகளை ஜோஹனஸ்பெர்க் G20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்டார். முதலாவது முன்மொழிவாக, அறிவுசார் மரபுகளைப் பாதுகாப்பதற்கு உலகளாவிய சேமிப்பகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு திறன் மேம்பாடு உருவாக்கப்பட வேண்டும் என்றும், பெண்டனில் (FENTANYL) போன்ற ஆபத்தான மருந்துப் பொருட்களின் பரவல் மற்றும் அவற்றை ஆதரிக்கும் கட்டமைப்புகளை கட்டுப்படுத்த, போதைப்பொருள் - பயங்கரவாத இணைப்பை தடுக்கும் நடவடிக்கைகள், சுகாதார அவசர நிலைகளில் விரைவாக செயல்படும் மருத்துவ குழுவை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஜோஹனஸ்பெர்கில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக இந்த சந்திப்பு நடந்தது. இந்தியா - இங்கிலாந்து உறவிற்கு இந்த ஆண்டில் புதிய ஊக்கம் கிடைத்துள்ளது என்றும், பல துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்றும் மோடி தனது X பதிவில் குறிப்பிட்டார். ஐ.நா. செயலர் குட்டெரெஸுடன் நடந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மோடி தெரிவித்தார்.