பாகிஸ்தான் வந்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தற்போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்ஸின் நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தால் அங்கு இலங்கை அணி கிரிக்கெட் விளையாடத் தயங்கியது. இந்நிலையில், இலங்கை அணியின் பாதுகாப்பு தற்போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை அடுத்து அந்த அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட சம்மதித்துள்ளதாக மொஹ்ஸின் நக்வி கூறியுள்ளார்.
கீவ் மீது ரஷ்யா 430 ட்ரோன்கள் மற்றும் 18 ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் தொடுத்ததாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக்காலத்தில் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இதன் பொருட்டு ரஷ்யா மீது உலக நாடுகள் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க உக்ரைன் கோரியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு, 2021 கேபிட்டல் ஹில் கலவரத்தை தூண்டியதாக வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்காக, பிபிசி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் ட்ரம்ப் இருவேறு இடங்களில் பேசியதை, ஒன்றுபோல திரித்து இணைக்கப்பட்டதாக பிபிசி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்காக பிபிசி-யிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக கேட்கப்போவதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிபிசி இயக்குநர் சமீர் ஷா, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ட்ரம்ப்பின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் தங்களுக்கு கிடையாது எனவும் விளக்கமளித்துள்ளார்.
இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பிராந்தியத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். காணாமல்போன மேலும் 21பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 23பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி நிலையற்ற தன்மையுடன் இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் அரசு பாகிஸ்தானிலிருந்து மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. ஆஃப்கான் வர்த்தகர்களுக்கு தாலிபான் அரசு அனுப்பிய நோட்டீஸில் "உங்களுக்கு மூன்று மாதங்கள் கெடு உள்ளது. அதன் பிறகு, பாகிஸ்தானில் இருந்து வரும் எந்த மருந்துக்கும் நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளில் நிலவும் பதற்றத்தின் தீவிரத்தைக் காட்டுவதாக உள்ளது. பாகிஸ்தான் மருந்துகளுக்குத் தடை விதித்ததால் இந்திய மருந்துகள் ஆஃப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெஃப் பிஸோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் அமெரிக்காவின் கேப் கனாவரலில் நியூ கிளென் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது. செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் நாசாவின் இரட்டை விண்கலங்களை இந்த ராக்கெட் ஏவிச் செல்கிறது. ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதும் “அடுத்த நிறுத்தம், நிலவுதான்” என்று ப்ளூ ஆரிஜின் ஊழியர்கள் உற்சாக கோஷமிட்டனர். எஸ்கேப்பேடு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலங்கள் ஓராண்டுக்குப் புவிக்கு அருகில் இருந்துவிட்டு அதற்குப் பிறகு ஈர்ப்பு விசையின் உதவியுடன் செவ்வாய் நோக்கிப் புறப்படும். 2 ஆயிரத்து 27-இல் செவ்வாயை அடையும். இந்த விண்கலங்களை அனுப்பியதன் மூலம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்குப் போட்டியாக ஜெஃப் பிஸோஸின் ப்ளூ ஆர்ஜின் உருவெடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.செ
மெக்சிகோவில் கல்வி நிதியை அதிகரிக்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற போராட்டத்தில், புதிய தொழிலாளர் மற்றும் கல்வி சீர்த்திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர்கள் சங்கத்தினர் பேரணியாக சென்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பதற்றமான சூழல் நிலவியது.
தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள இணைய மோசடிக்கு பெயர் போன வளாகத்தில் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி நடந்துவருவதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. கே.கே. பார்க் என்றழைக்கப்படும் இந்த வளாகம், உலகளாவிய இணைய மோசடிகளை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த வளாகத்தில் உடற்பயிற்சிக் கூடம், ஸ்பா, கரோக்கி பார்லர் உட்பட மொத்தம் 148 கட்டடங்கள் உள்ளன. இதில் 101 கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 47 கட்டடங்களை இடிக்கும் பணி நடந்து வருவதாகவும் மியான்மர் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்துடன் நடந்த கால்பந்து போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். எதிரணி வீரரை முழங்கையால் தாக்கியதற்காக அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. 226 ஆவது சர்வதேசப் போட்டியில் விளையாடிய ரொனால்டோவுக்கு முதன்முறையாக
சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதன் காரணமாக 2026 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.