trump pt web
உலகம்

PT World Digest| 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை முதல் ட்ரம்பின் காலக்கெடு வரை!

இன்றைய PT World Digest பகுதியில் நேபாளத்தில் மீண்டும் தொடங்கிய GEN Z போராட்டம் முதல் G20 மாநாடு வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

மடகாஸ்கர் அதிபர் மாளிகையிலிருந்து மரகதக் கல் மீட்பு !

மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ மரகத கல்லை மீட்டிருப்பதாக, அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது. எமரால்டு எனப்படும், அந்த பச்சை நிற மரகதக் கல், இந்திய மதிப்பில் 213 கோடி ரூபாய் இருக்குமென கூறப்படுகிறது.

மடகஸ்கர் அதிபர் மாளிகை

அண்மையில், மடகாஸ்கரில் இளம் தலைமுறையினரின் போராட்டம் வெடித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அதிபர் ரஜோலினா, தனது பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை !

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம், வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டுமென்பதற்காக, இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

இதனையடுத்து மெட்டா நிறுவனம், தனது சமூக வலைதளங்களை பயன்படுத்தும் 16 வயதுக்குட்பட்டோரின் கணக்குகளை, வரும் 4ஆம் தேதி முதல் முடக்கவிருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபாய் சாகச நிகழ்வில் வெடித்துச் சிதறிய தேஜஸ் விமானம் !

துபாயில் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த தேஜஸ் விமானம் நேற்று விபத்துக்குள்ளானது. நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விமானம் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. விமானத்தை இயக்கிய விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

IAF Tejas Jet Crashes

துபாய் நேரப்படி, மதியம் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து காரணமாக அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை சுற்றி அடர்ந்த கருப்புப் புகை மண்டலம் எழுந்தது. இந்நிலையில், விமான விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது

போர் நிறுத்தம்: உக்ரைனுக்கு ட்ரம்ப் காலக்கெடு

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது நிர்வாகத்தின் 28 அம்ச சமாதானத் திட்டத்தை உக்ரைன் ஏற்றுக்கொள்வதற்கு நவம்பர் 27-ஐ இறுதி காலக்கெடுவாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்ணயித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி, ட்ரம்ப்

இதை ஏற்கத் தவறினால் உக்ரைனுக்கு அமெரிக்க அரசு வழங்கி வரும் ஆயுத உதவியும் உளவுத் துறை தகவல் பகிர்வும் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்படுள்ளது. இந்த காலக்கெடு குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ”இந்த ஒப்பந்தத்தை ஏற்றால் கண்ணியத்தை இழக்க நேரும். ஏற்காவிட்டால் முக்கியமான கூட்டாளியை இழக்க நேரும்” என கவலை தெரிவித்துள்ளார்.

வியட்நாம் வெள்ளம்: 43 பேர் உயிரிழப்பு.!

வியட்நாமில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்த வெள்ளம் ஃபூ யென் மாகாணத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 67,700க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமாகியுள்ளன.

வியட்நாம் வெள்ளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 72 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் வியட்நாம் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

வங்கதேசம்: நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு.!

வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 6 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்காவின் அருகேயுள்ள நர்சிங்டி நகரை மையமான கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.7ஆக பதிவானது. இதில் கட்டடங்கள் இடிந்ததில், 6 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

pt web

மேலும், கொல்கத்தாவிலும், இந்தியாவின் கிழக்கு பகுதிகளிலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதேபோல, இன்று காலை பாகிஸ்தானிலும், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில், 5.2 ஆக பதிவாகியுள்ளது.

ட்ரம்பின் மகன் குஜராத்தில் கர்பா, தாண்டியா நடனமாடி உற்சாகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், கர்பா மற்றும் தாண்டியா நடனமாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Donald Trump Jr

ஆக்ராவில் நடைபெறும் திருமண விழாவிற்காக வருகை தந்துள்ள டொனால்ட் டிரம்ப் ஜூனியர், குஜராத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், தனது துணையுடன் நடனமாடி மகிழ்ந்தார். அவர் தாஜ்மஹால் மற்றும் அம்பானியின் வன்தாரா உயிரியல் பூங்காவையும் சுற்றிப் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.!

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, ஜோகனஸ்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக தென்னாப்ரிக்கா சென்றுள்ளார்.

g20 மாநாட்டில் மோடி

விமான நிலையத்தில், தென்னாப்பிரிக்க பெண்கள் அந்நாட்டு கலாசார முறைப்படி நடனமாடி, பிரதமர் மோடியை வணங்கி வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடியும் அவர்களது வரவேற்பை வணங்கி ஏற்றுக்கொண்டார்.

ஆஷஸ் முதல் டெஸ்ட்: பிட்ச் சர்ச்சை வெடித்தது.!

பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் விழுந்தது. ஒரே நாளில் இத்தனை விக்கெட்டுகள் வீழ்ந்ததைத் தொடர்ந்து, பிச்சின் தரம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டித் தரத்திற்கு ஏற்ற பிட்சாக இல்லை என சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்

பேட்டிங் செய்ய முடியாத அளவு திடீரென மாறும் பவுன்ஸ் மற்றும் சீம் மூவ்மென்ட் காரணமாக, பேட்டர்கள் தடுமாறினர். இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறு நடந்தால் கடும் விமர்சனம் எழும்; ஆனால் பெர்த்தில் நடந்ததை யாரும் சாடவில்லை என்று கூறியுள்ளார். பிட்சின் அணுகுமுறை சமநிலையற்றது; பவுலர்களுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.