nepal protest x page
உலகம்

நேபாளம் | மீண்டும் வெடித்த மன்னராட்சி ஆதரவு போராட்டம்.. ஊரடங்கு உத்தரவு!

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி போராட்டம் வெடித்துள்ளது.

Prakash J

நேபாளத்தில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த மன்னராட்சி, கடந்த 2008இல் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களின் காரணமாக அகற்றப்பட்டு மக்களாட்சி அமைந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் அந்நாட்டில் மக்களாட்சி தினம் கொண்டாடப்பட்டபோது, ‘நேபாளத்தைப் பாதுகாத்து தேச ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமக்கு ஏற்பட்டுள்ளது’ என்று அந்நாட்டின் முன்னாள் அரசா் ஞானேந்திர ஷா தெரிவித்தாா். இதையடுத்து அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்துவதற்கு தொடா்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து, மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் மீண்டும் மன்னராட்சி அமைய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

இதை வலியுறுத்தி கடந்த மார்ச் தொடக்கத்தில் தலைநகர் காட்மாண்டு, பொக்காரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ராஷ்ட்ரீய பிரஜா தந்திர கட்சியும் மன்னராட்சியை மீட்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி, ”நேபாளத்தின் அரசமைப்புச் சட்டம் மன்னராட்சியை அங்கீகரிக்கவில்லை. மன்னராட்சியை மக்கள் தூக்கி எறிந்து பல காலமாகிவிட்டது. எனவே, ஒருவா் மீண்டும் மன்னராவது சாத்தியமற்றது. அரசாட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே ஞானேந்திர ஷாவின் நோக்கம் என்றால், அவா் தோ்தலில் போட்டியிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரக் கோரி போராட்டம் வெடித்துள்ளது. இன்று நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. காட்மாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர். மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் பிரிகுதி மாண்டப் என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரேநேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீசினர். இதனால் அங்கு நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இம்மோதலின்போது தீவைப்பு சம்பவங்களும் போலீசார் தாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.