உலகம்

"கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள் எல்லை மீறி செல்கிறது" - நியூசி. பிரதமர் ஆவேசம்

ஜா. ஜாக்சன் சிங்

நியூசிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் எல்லை மீறி செல்வதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கானோர் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 7-வது நாளினை எட்டியிருக்கிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர், "கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெறும் போராட்டங்களை பார்த்து, அதன் தாக்கத்தின் காரணமாக நியூசிலாந்தில் தற்போது மக்கள் போராடி வருகின்றனர். முதலில் தடுப்பூசியை எதிர்த்து நடந்த போராட்டம், கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக இப்போது திரும்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்களை வர முடியாதபடியும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையூறு விளைவித்தும் போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள். இது அவர்களுக்கான எல்லையை மீறும் செயல் என்பதை அவர்கள் உணர வேண்டும்" எனக் கூறினார்.