உலகம்

ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் பிரான்ஸில் வெடித்த போராட்டம்!

webteam

பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது.

பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் கடந்த ஜனவரி 20ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டக் களம் போர்க்களமாக மாறியது. அப்போது இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கியதில், அவர் தன்னுடைய விதைப்பையை இழந்தது பரபரப்புக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், பிரான்சில் ஓய்வு வயதை 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தாமல் நிறைவேற்ற அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்து பேராட்டங்கள் வெடித்தன. தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கான்சார்ட் சதுக்கம் அருகே குப்பை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது, தீவிரமடைந்ததால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் போலீசாருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரித்தனர். மேலும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில் இம்மானுவேல் மெக்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி தலைவர் மரின் லுபென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”இது அரசாங்கத்திற்கு ஒரு முழுமையான தோல்வி. ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக நினைத்து தன்னை ஏமாற்றிக் கொண்டது”என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 49.3 ஐ மெக்ரான் பயன்படுத்தினார். இந்த மசோதா கடந்த 16ஆம் தேதி (நேற்று) செனட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இருப்பினும், தேசிய சட்டமன்றத்தில் இருந்த வலதுசாரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மெக்ரானை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்