உலகம்

பலமுறை சொல்லியும் மாஸ்க் அணியாத மாணவி... பணியையே உதறிய ஜார்ஜியா பேராசிரியர்!

பலமுறை சொல்லியும் மாஸ்க் அணியாத மாணவி... பணியையே உதறிய ஜார்ஜியா பேராசிரியர்!

நிவேதா ஜெகராஜா

புகழ்பெற்ற ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் எவ்வளவு சொல்லியும் மாஸ்க் அணிய மறுத்ததால், 88 வயது பேராசிரியர் பணியிலிருந்தே விலகிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

பேராசிரியர் இர்வின் பெர்ன்ஸ்டீன் என்பவர்தான் பணியை ராஜினாமா செய்தார். ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக இருக்கும் இர்வின் தனது வகுப்பில் மாணவர்கள் கலந்துகொள்ள முகக்கவசம் கட்டாயம் என்று அறிவித்திருந்தார். ஜார்ஜியா பல்கலைக்கழக வளாக வளாகங்களுக்குள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. ஆனால், சமீப வாரங்களில் இரண்டு மாணவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தனர். இதனால் அச்சம் அடைந்த பேராசிரியர் இர்வின் தனது வகுப்புகளுக்காக தனி நிபந்தனை விதித்திருக்கிறார்.

மேலும், முகக்கவசம் இல்லையெனில் வகுப்புகள் கிடையாது என்பதை 'No mask, no class' என்று தனது வகுப்பறையின் முகப்பில் எழுதி ஒட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான் சமீபத்தில் இர்வின் பாடம் எடுத்திக்கொண்டிருந்தபோது, மாணவி ஒருவர் முகக்கவசம் அணியாமல் வகுப்புக்கு வந்திருக்கிறார். அந்த மாணவியிடம், யாரிடமாவது முகக்கவசத்தை வாங்கி அணிய சொல்லியிருக்கிறார் இர்வின். அதன்படி, மற்றொரு மாணவியிடம் இருந்து முகக்கவசத்தை வாங்கி அணிந்தாலும், சரியாக அதை அணியவில்லை. இதனால், இர்வின் சம்பந்தப்பட்ட மாணவியை மாஸ்கை சரியாக அணியும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆனால் மாணவியோ, `மூச்சுவிட மிகவும் கடினமாக இருக்கிறது' என்று கூறி மாஸ்க் அணிய மறுத்திருக்கிறார். பின்னர் கல்லூரியில் இருக்கும் சுகாதார நிலைமைகளை எடுத்து விளக்கி சொல்லி, கொரோனா தாக்க நிறைய வாய்ப்பிருருக்கிறது என்றுள்ளார். இப்படி பல முறை சொல்லியும், மாணவி மாஸ்க் அணிய முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்தே ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளார் பேராசிரியர் இர்வின்.

``முன்பு நான் விமானப்படையில் இருந்தபோது, என் நாட்டைப் பாதுகாப்பதற்காக என் உயிரைப் பணயம் வைத்திருந்தேன். ஆனால், இந்த கொரோனா தொற்றுநோயின்போது முகக்கவசம் அணியாத மாணவர்களுடன் பாடம் எடுத்து, நான் என் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை. கடந்த சில வாரங்களில் தொற்றுநோய் அதிகமாக பரவி வருகிறது. இதனால் கூடுதல் அச்சம் இருந்தது. தற்போது ராஜினாமா செய்தபிறகு கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளேன்" என்று தனது ராஜினாமா குறித்து தெரிவித்திருக்கிறார் பேராசிரியர் இர்வின்.

இவர் கொரோனா அச்சம் காரணமாக, ராஜினாமா செய்யும் முதல் பேராசிரியர் கிடையாது. கடந்த வாரம், வடக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு விரிவுரையாளர்கள் தடுப்பூசி போடாத மற்றும் முககவசம் அணியாத மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது குறித்த கவலைகளை தெரிவித்துவிட்டு ராஜினாமா செய்தனர் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.